பொன்னியின் செல்வன் கதை தெரியுமா..? கதை சுருக்கம் இதுதான்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (13:35 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது தொடங்கி பலரும் பொன்னியின் செல்வன் கதையை அறிந்து கொள்ள ஆவல் காட்டி வருகின்றனர்.

1950களில் அமரர் கல்கி எழுதி வாரத் தொடராக வெளியான நாவல் பொன்னியின் செல்வன். சுமார் மூன்றரை ஆண்டுகாலம் 2500 பக்கங்கள் 5 பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாக படமாக எடுத்துள்ளார். பாதி உண்மையான கதாப்பாத்திரங்களும், மீதி புனைவு கதாப்பாத்திரங்களும் கலந்த இந்த கதை தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது பொன்னியின் செல்வனின் கதை என்ன என்பதை சுருக்கமாக காண்போம்.

சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக விளங்கியவர் பராந்தக சோழர். இவருக்கு மூன்று புதல்வர்கள். முதல் மகன் இராஜாதித்யர் போரில் காலமாகி விடுகிறார். இரண்டாவது மகன் கண்டராதித்தர் தீவிர சிவ பக்தி உடையவர். ராஜ்ஜிய ஆசை இல்லாதவர். அதனால் மூன்றாவது மகன் அரிஞ்சய சோழருக்கு பட்டம் சூட்டப்படுகிறது.

அரிஞ்சய சோழரின் மகன்தான் சுந்தர சோழர். சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி (ராஜராஜ சோழன்) உள்ளிட்ட மூன்று வாரிசுகள். சுந்தர சோழரின் பெரியப்பாவான கண்டராதித்தருக்கு அந்திம காலத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அவன்தான் மதுராந்தகன்.

சுந்தர சோழர் நோயுற்று படுக்கை ஆனதும் யாருக்கு சோழ ராஜ்யம் என்ற போட்டி எழுகிறது. சுந்தர சோழரின் அரண்மனை காவல் தளபதியான சின்ன பழுவேட்டரையரும், தன அதிகாரியான பெரிய பழுவேட்டரையரும் மற்ற சிற்றரசர்கள் உதவியுடன் சதி செய்து மதுராந்தகனை சிம்மாசனம் ஏற்ற திட்டமிடுகிறார்கள்.

அதேசமயம் குறுநில மன்னரான பூதி விக்கிரமகேசரியும், சுந்தர சோழரின் மாமனராகிய திருக்கோவலூர் மலையமானும் தனது பேரன்களான ஆதித்த கரிகாலன் அல்லது அருள்மொழிக்கு ராஜ்ஜியம் கிடைக்க வேண்டுமென திட்டமிடுகிறார்கள். இவர்கள் யாவரும் வரலாற்றில் உண்மையாக வாழ்ந்த மனிதர்கள்.

ALSO READ: பொன்னியின் செல்வன் “பாகுபலி” மாதிரி இருக்குமா? – மணிரத்னம் சொன்ன பதில்!

இனி கற்பனை கதாபாத்திரங்கள். சுந்தரசோழருக்கு வானவன்மாதேவி (மலையமானின் மகள்) உடன் திருமணம் ஆகும் முன்னே வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்தது. காது கேளாத வாய் பேச முடியாத அந்த பெண் மந்தாகினி தேவி. ஒரு தீவில் வசித்து வந்த மந்தாகினி தேவி சுந்தரசோழரை தேடி தஞ்சை வரும்போது இரண்டு குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். அதில் ஒருத்தி நந்தினி. இந்த நந்தினிதான் சோழ சாம்ராஜ்யத்தை அழிக்க சபதம் கொண்டு முதியவரான பெரிய பழுவேட்டரையரை மணந்தவள். பழுவேட்டரையர்களோடு சேர்ந்து மதுராந்தகனை அரியணை ஏற்றவும், முன்பகை காரணமாக ஆதித்த கரிகாலனை கொள்ள துடிப்பவளும் இவளே!

நந்தினியை ஒரு காலத்தில் ஆதித்த கரிகாலன் விரும்பினான். ஆனால் நந்தினி பாண்டிய மன்னன் வீரபாண்டியனை விரும்பினாள். அப்படி இருக்கும்போது வீரபாண்டியனை ஒரு போரில் ஆதித்த கரிகாலன் கொன்று விடுகிறான். நந்தினி கரிகாலனிடம் கெஞ்சியும் இரக்கம் காட்டாமல் வீரபாண்டியன் தலையை வெட்டியதால் தக்க தருணத்தில் கரிகாலனை கொல்ல பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடன் தொடர்ந்து சதித்திட்டத்தில் இருக்கிறாள் நந்தினி.

மந்தாகினியின் மற்றொரு குழந்தை பூவிற்கும் சேந்தன் அமுதன் என்பவன். சுந்தர சோழருக்கு பிறகு அரியணை ஏறுவது யார் என்ற இந்த போட்டியில் ஒருவரை கொல்ல மற்றொருவர் சதி, கொலை முயற்சி இதையெல்லாம் தாண்டி யார் சிங்காதனம் ஏறினார்கள் என்ற கதைதான் பொன்னியின் செல்வன்.

ALSO READ: பொன்னியின் செல்வனில் நடித்ததால் வீட்டில் பயங்கர திட்டு… ஜெயம் ரவி!

இப்படிபட்ட பரபரப்பில்தான் இந்த கதைக்குள் நுழைகிறான் வந்தியத்தேவன். நாடற்ற இளவரசனான வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலரின் நண்பன். கரிகாலன் தனது தமக்கை குந்தவைக்கு வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்து அனுப்புகிறான். குந்தவையை சந்திக்கும் வந்தியத்தேவன் அவளோடு காதல் கொள்கிறான்.

நாட்டில் நடக்கும் குழப்பங்களை தவிர்த்து தனது தம்பி அருள்மொழிக்கு மகுடம் சூட்ட நினைக்கும் குந்தவை, வந்தியத்தேவனை அனுப்பி இலங்கையில் போர் நடத்தி வரும் அருள்மொழியை தஞ்சை அழைத்து வர சொல்கிறாள். இதற்காக ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற வீர வைஷ்ணவனுடன் இலங்கையில் பயணம் மேற்கொள்கிறான் வந்தியதேவன். அதேசமயம் பழுவேட்டரையர் ஆட்களும் அருள்மொழியை சிறை பிடிக்க இலங்கை செல்கின்றனர்.

பின்னர் ஒருவழியாக அருள்மொழிவர்மரை வந்தியத்தேவன் அழைத்து கொண்டு வர அந்த கப்பல் புயலில் சிக்கி மூழ்குகிறது. இதனால் அருள்மொழி வர்மர் இறந்து விட்டதாக நாடு முழுவதும் செய்தி பரவுகிறது. அதேசமயம் ஆதித்த கரிகாலனை சம்புவரையர் மாளிகைக்கு வர செய்து பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் உதவியுடன் தீர்த்து கட்ட நந்தினி திட்டமிடுகிறாள். பாண்டிய ஆபத்துதவியான ரவிதாசன் சுந்தரசோழரை கொல்வதற்கும் ஆட்களை அனுப்புகிறான்.

ஒரே சமயத்தில் சுந்தரசோழர், அவர் மூத்த மகன் ஆதித்த கரிகாலன், இளைய மகன் அருள்மொழிவர்மர் (ராஜராஜசோழர்) மூவரின் உயிரை எடுக்க திட்டம் நடக்கிறது. இதில் யார் யார் மடிந்தார்கள்? யார் யார் வென்றார்கள்? என்ற விருவிருப்புடன் பயணிக்கிறது நாவல். இந்த கதை சுருக்கம் படம் பார்ப்பவர்களுக்கு கதையை புரிந்து கொள்ள உதவியாய் இருக்கும் என நம்புகிறோம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்