சோழ ரத்தம் குடிக்கத் துடிக்கும் வால்”மீன்”? பலியாவது யார்? – பொன்னியின் செல்வன் விமர்சனம்!

வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (08:43 IST)
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்பு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படமாக மாற எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டு கடைசியாக ஒரு வழியாக படமாக வந்துவிட்டதே பலருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சோழ சாம்ராஜ்யத்தின் மாமன்னன் சுந்தரசோழர் நோய்வாய்ப்பட்டு தஞ்சையில் இருக்கிறார். அவரது மகன்களான ஆதித்த கரிகாலனும், அருள்மொழி வர்மனும் ஆளுக்கு ஒருபுறம் போரில் இருக்கும் சமயம், வானில் ஒரு வால்நட்சத்திரம் உண்டாகிறது. இந்த வால்நட்சத்திரம் மறையும் முன் சோழ ரத்தம் ஒன்றை பலி கொள்ளும் என்பது கூற்று.

ALSO READ: பொன்னியின் செல்வன் கதை தெரியுமா..? கதை சுருக்கம் இதுதான்!

இங்கிருந்து கதை தொடங்குகிறது. மாமன்னன் சுந்தரசோழரின் பெரியப்பா பையனான மதுராந்தகன் சோழ சிம்மாசனத்தின் மீது ஆசைக் கொள்கிறான். அவனை அரியணை ஏற்ற பழுவேட்டரையர்களும் சிற்றரசர்களும் ஒருபுறம் ரகசிய திட்டம் தீட்டுகிறார்கள். மறுபுறம் பழுவேட்டரையரின் இளம் மனைவி நந்தினி, முன்னொரு சமயம் தனது காதலன் வீரபாண்டியனை தலையை வெட்டிக் கொன்ற ஆதித்த கரிகாலனை கொல்ல பாண்டிய ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சதி செய்கிறாள்.

சோழ சாம்ராஜ்யத்தை வஞ்சமும், துரோகமும் சூழ்ந்துள்ள நிலையில் ஆதித்த கரிகாலனையும், அருள்மொழியையும் தஞ்சை வரவழைத்து சோழ நாடு உள்நாட்டு போர்களால் அழியாமல் தடுக்க திட்டமிடுகிறாள் அவர்களது தங்கையும், இளவரசியுமான குந்தவை. அப்போதுதான் ஆதித்த கரிகாலனிடமிருந்து சேதி கொண்டு வருகிறான் படத்தின் நாயகன் வந்தியத்தேவன். வந்தியத்தேவனின் பயணம் வழியாக ஒட்டுமொத்த படத்தோடு சேர்ந்து நாமும் நகர்கிறோம்.

2500 பக்கங்கள், 5 பாகங்கள் கொண்ட ஒரு நாவலை இரண்டு பாக படமாக எடுப்பது என்பது மிகவும் இக்கட்டான சவாலான பணியும் கூட. முக்கியமாக நாவல் படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவரையும் அது திருப்தி படுத்த வேண்டும். நாவல் படிக்காதவர்களுக்கு அது புரியவும் வேண்டும். கிட்டத்தட்ட கத்தி மேல் நடப்பது போலான இந்த ஆபத்தான முயற்சியை மணிரத்னம் மிகவும் கவனமாக செய்திருக்கிறார்.


மணிரத்னத்தை தவிர இதை யாரும் செய்ய முடியாது என்ற அளவில் கதையை வேகமாக நகர்த்தி செல்வதுடன், ஒவ்வொரு கதாப்பாத்திரங்கள் இடையே உள்ள நட்பு, பகை, வஞ்சம், காதல் உள்ளிட்ட உணர்வுகளையும் சரியாக கொண்டு வந்துள்ளார். நாவலில் உள்ளதுபோல அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க முடியாதது தெரிகிறது.

ALSO READ: பொன்னியின் செல்வன்: வைரமுத்து ஏன் இல்லை… மீண்டும் விளக்கம் அளித்த மணிரத்னம்

ஆனால் முக்கியமான கதாப்பாத்திரங்களான குந்தவை, ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன் உள்ளிட்ட கதாப்பாத்திரங்களை சுற்றி மற்ற கதாப்பாத்திரங்களை சரியாக கொண்டு வந்து சேர்த்துள்ளார். நாவலில் இருந்து பல பகுதிகளை நீக்கியும், சுருக்கியும் தனது பாணியில் கதையை நகர்த்தியுள்ளார் மணிரத்னம்.



படத்தின் பிண்ணனி இசையில் ஏ.ஆர்.ரகுமான் தனது திறமையை வழக்கம்போல காட்டியுள்ளார். ரவிவர்மனின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் செட் வேலைகள் சிறப்பாக இருந்தன. ஆனால் முதல் பாதியில் ஆங்காங்கே இடம்பெறும் க்ளோஸப் மற்றும் ஷேக்கிங் ஷாட்கள் ஆடியன்ஸின் பொறுமையை சற்று சோதிக்கின்றது.

மிகப்பெரும் கதையின் சுருங்கிய வடிவம் என்பதால் பல இடங்களில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பெயரையும் புரிந்து கொள்ளவும், கதையோட்டத்துடன் இணையவும் சற்று நேரம் பிடிக்கலாம். இரண்டாவது பாதி பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளுடன் நகர்ந்து ஒரு மிகப்பெரும் ட்விஸ்ட்டுடன் முடிவடைகிறது. தமிழ் சினிமாவின் 70 ஆண்டுகால எதிர்பார்ப்பு ஒருவழியாக இன்று திரைகளில்…!

Edited By : Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்