கோட் படத்தில் அப்பா வரும் காட்சிகளை மக்கள் கொண்டாடும் விதத்தை பார்க்கும் போது புல்லரிக்கிறது. -விஜய பிரபாகரன்!

J.Durai
சனி, 7 செப்டம்பர் 2024 (14:03 IST)
மதுரை அவனியாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு ரூபாய் 25 ஆயிரம் மதிப்பில் மின்விசிறிகள் மற்றும் 17,000 மதிப்பில் விளையாட்டு மைதான கேட் அமைத்து தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் வழங்கினார்.
 
அப்போது மாணவர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிடுகையில்......
 
நான் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, அது புதிதாக துவங்கப்பட்ட பள்ளி என்பதால் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது அடுத்த ஆண்டு நான் ஆறாம் வகுப்பு செல்லும்போது அங்கே மின்விசிறிகள் மற்றும் கணினிகள் என அடிப்படையான பொருட்கள் அனைத்தும் இருந்தது அவற்றில் விஜயகாந்த் என்னும் பெயர் இருந்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அங்கிருந்து மற்ற பள்ளிகளுக்கு கேம்ப்பிற்காக நான் செல்லும்போது அங்கும் உள்ள பொருள்களில் விஜயகாந்த் என்னும் பெயர் இருந்தது. 
 
பாடத்தில், விளையாட்டு போட்டியில் முதலாம், இரண்டாவதாக வருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. அது உங்களை ஊக்குவிப்பதற்காக தானே தவிர உங்களிடம் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்க கூடாது. உங்களுக்கு என்ன தேவை இருந்தாலும் நான் ஒரு அண்ணனாக உங்களுக்கு வந்து நிச்சயம் உதவி செய்வேன். 
 
பின்னர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு கலகலப்பாக உரையாடினார். 
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்......
 
விஜய் அரசியல் வருகை மற்றும் கூட்டணி குறித்த கேள்விக்கு:
 
விஜய் அண்ணன் மிகப்பெரிய சினிமா நட்சத்திரம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அரசியல் என்று பார்க்கும்போது தேமுதிக 20 ஆண்டு பழமையான கட்சி. விஜய் அண்ணன் முதலில் அரசியலில் அவரது கொள்கை மற்றும் மக்கள் வரவேற்பு உள்ளிட்டவற்றை வைத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கையை சொல்ல முடியும்.
 
இன்னும் அவர் மாநாட்டை நடத்தவில்லை கட்சியை முழுமையாக துவங்கவில்லை அதன் பிறகு அவற்றை பேசுவோம். 
 
மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி உறுதி செய்யப்படுமா என்ற கேள்விக்கு:
 
அவர் எங்களுடன் கூட்டணி வைப்பதற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆரம்பித்துள்ளார். அவர் கட்சியை முழுமையாக தொடங்கிய பிறகு எந்த கூட்டணிக்கு செல்கிறார் என்பது தெரியும்.
 
நான் கடந்த மூன்று நாட்களாகவே தொடர் சுற்று பயணத்தில் உள்ளேன் இந்த சுற்றுப்பயணம் மூன்று மாதத்திற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டது என்பதால் என்னால் இன்னும் கோட் படத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த படத்தில் அப்பா வரும் காட்சிகளை சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு அனுப்பி வைக்கிறார்கள். தியேட்டரில் மக்கள் அந்த காட்சிகளை கொண்டாடும் விதத்தை பார்க்கும் போதே புல்லரிக்கிறது.
 
விரைவில் படத்தை பார்த்து விடுவேன் அதன் பிறகு கருத்து சொல்கிறேன். 
 
விஜயின் கட்சி கொடியில் சர்ச்சை உண்டானது குறித்த கேள்விக்கு:
 
பல தடைகள் மற்றும் அவமானங்களை கடந்து தான் தேமுதிக கொடி இன்று பறக்கிறது. கேப்டன் என்கிற ஆளுமையால்தான், ஆனால் எங்களுக்கும் எத்தனையோ பிரச்சனைகள் வந்தது. 
 
எங்கள் கல்யாண மண்டபத்தை இடித்தார்கள், வருமானவரி சோதனை நடத்தினார்கள், மதுராந்தகத்தில் இருந்த எங்கள் சொந்த இடத்தில் சோலார் பேனல் வைத்தார்கள் இதுபோல பல பிரச்சினைகள் வந்துள்ளது.
 
இதையெல்லாம் தாண்டி வருவது தான் அரசியல். அது விஜய் அண்ணன் அவர்களுக்கும் தெரியும். 
 
2026 தேர்தல் வியூகம் குறித்த கேள்விக்கு:
 
2024 தான் 2025 முடிந்து 2026 வரும் போது பேசுவோம்.
 
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு:
 
என்னையும் ராஜன் செல்லப்பா அண்ணனையும் சிண்டு முடித்து வைக்காதீர்கள். 2026ல் அதை பார்த்துக் கொள்வோம் என கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்