’பேச்சி’ எனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது - நடிகர் தேவ் ராம்நாத்!

J.Durai
சனி, 19 அக்டோபர் 2024 (17:35 IST)
தமிழ் சினிமாவில் அறிமுக நடிகர்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது ஹீரோக்களின் பற்றாக்குறை ஏற்படத்தான் செய்கிறது. 
 
காரணம், அறிமுகமாகும் நடிகர்களில் நிலைத்து நிற்பவர்கள் சிலர் மட்டுமே. அப்படி தங்களது ஆரம்பகால படங்களின் மூலம், இவர் எதிர்காலத்தில் தனக்கான இடத்தை பிடிப்பார் என்ற நம்பிக்கையை தனது நடிப்பு மூலம் மக்கள் மனதில் விதைப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அவர்களில் ஒருவராக ’பேச்சி’ படம் மூலம் அடையாளம காணப்பட்டுள்ளார் நடிகர் தேவ் ராம்நாத்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான ‘பேச்சி’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தற்போது ஒடிடி தளத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் மட்டுமின்றி, அதில் நாயகனாக நடித்த தேவ் ராம்நாத் தமிழ் சினிமாவின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர், தற்போது பல திரைப்படங்களிலும், இணையத் தொடர்களிலும் ஒப்பந்தமாகி பிஸியாகியிருக்கிறார்.
 
எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது நம்பிக்கை மற்றும் முயற்சியின் மூலம் தனக்கான அங்கீகாரத்துக்காக பயணித்துக் கொண்டிருக்கும் தேவ் ராம்நாத், தற்போது தனக்கு கிடைத்திருக்கும் அடையாளத்தை கடந்து சினிமாவில் தனக்கான இடத்தை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.  வாய்ப்புக்காக காத்திருக்காமல் தனக்கான வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கும் தேவ் ராம்நாத், தனது அடுத்தடுத்த படங்கள் பற்றி பேசினார்.......
 
’பேச்சி’ படத்திற்கு பத்திரிகையாளர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்தார்கள், அவர்களுடைய ஆதரவால் தான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் மூலம் ஒரு அடையாளம் கிடைத்தது, அதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு அடையாளத்திற்காக த்தான் பல வருடங்களாக போராடிக் கொண்டிருந்தேன்.
 
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது  தெரியும். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்து பலர் சாதித்தாலும், அது சாத்தியமாவது அவ்வளவு எளிதல்ல, இருந்தாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற முடிவில் இறங்கினே. விளம்பர படங்கள், குறும்படங்கள் என்று நடிப்பு பயணத்தை தொடங்கிய எனக்கு, இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் மூலம் தான் சினிமாவில் நடிகராக அறிமுகமானேன். அப்படத்தை தொடர்ந்து ‘ஒருநாள் கூத்து’ படத்தில் நடித்தேன். அந்த படத்திற்கு கோகுல் பினாய் தான் ஒளிப்பதிவாளர். அப்போது ஏற்பட்ட நட்பு மூலம் தான் அவர் தயாரித்த ‘பேச்சி' படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
 
சமீபத்தில் வெளியான ‘போர்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நண்பராக நடித்தேன். ‘வெள்ளை பூக்கள்’ படத்தில் விவேக் சாரின் மகனாக நடித்தேன், ‘ஸ்வீட் காரம் காஃபி’ இணையத் தொடரில் முதன்மை வேடத்தில் நடித்தேன். இப்படி பலவற்றில் நடித்துக்கொண்டு தான் இருந்தேன். லாக் டவுன் காலத்தின் போது ’ஐ ஹேட் யூ, ஐ லவ் யூ’ என்ற யூடியூப் தொடரில் நடித்தேன், அது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ரொம்ப சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட தொடர் அது, அதை தயாரித்து வடிவமைத்ததும் நான் தான்,  25 மில்லியன்களுக்கு மேலான பார்வையாளர்களை கடந்தது. இப்படி படங்கள், இணையத் தொடர் என்று நடித்து வந்தாலும், ‘பேச்சி’ தான் என்னை மக்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறது.
 
’பேச்சி’ படத்தில் நடித்தது  மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. பால சரவணன் போன்ற அனுபவமுள்ள நடிகர்களுடன் நடிக்கும் போது நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது என்று  நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் கிளைமாக்ஸில் எனது நடிப்பை பார்த்துவிட்டு பால சரவணன், மிக சிறப்பாக இருந்தது என்று சொல்லி பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. 
 
இப்போது நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது, அதே சமயம் நானும் எனக்கான வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளேன்.
 
இப்போது முன்னணி ஒடிடி தளத்திற்கான இணையத் தொடர் ஒன்றில் நடிப்பதோடு, ஒரு திரைப்படத்திலும் நாயகனாக நடிக்கிறேன். இத்துடன், வெற்றி பட இயக்குநர்கள் நான்கு பேருடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து அதில் நாயகனாக நடிக்க இருக்கிறேன். நாங்கள் நீண்டகால நண்பர்கள், நாங்கள் இணைந்து ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பது பற்றி நீண்ட நாட்களாகவே பேசி வருகிறோம், அதற்கான தருணம் தற்போது அமைந்திருக்கிறது.
 
இத்தனை வருடங்கள் அனுபவமுள்ள உங்களுக்கு ஹீரோவாக வெற்றி பெற காலதாமதம் ஆனது ஏன்? என்ற கேள்விக்கு  நடிகர் தேவ் ராம்நாத் கூறியது:
 
தற்போதைய சூழ்நிலையில் சினிமாவில் ஒருவர் மீது நம்பிக்கை வைப்பது என்பது மிகப்பெரிய விசயம். படம் தயாரிப்பவர்கள் அந்த கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருப்பார், இவர் நன்றாக நடிக்கிறார், என்பதெல்லாம் பார்ப்பதை விட, இவருக்கு எவ்வளவு மார்க்கெட் இருக்கிறது, இவர் நடித்தால் சாட்டிலைட் உரிமம் விலை போகுமா?, ஒடிடி வியாபாரம் நடக்குமா? என்று தான் யோசிக்கிறார்கள். திறமைக்காக மட்டுமே வாய்ப்பு கொடுப்பது தற்போது குறைந்து விட்டதாக நினைக்கிறேன், அதே சமயம் 2010 முதல் 2015 வரை நிறைய புதுமுகங்கள் வந்தார்கள், அப்போது இருந்த நிலை இப்போது இல்லை, அதனால் தான் எனக்கான அடையாளத்தை பெற இவ்வளவு காலம் ஆனதாக நினைக்கிறேன். ஆனால், இது சினிமாவில் சகஜம் தான், இது பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் இங்கு காணாமல் போய்விடுவோம்.
 
’ஜல்லிக்கட்டு’ பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிஸ்ஸெரி இயக்கம், இளையராஜா சார் இசை, தியாகராஜன் குமரராஜா திரைக்கதை, இப்படி ஒரு கூட்டணியில் நான் ஒப்பந்தமாகி, ஐந்து நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், அதன் பிறகு அந்த படம் கைவிடப்பட்டு விட்டது. இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் சார், அதில் ஆடிசன் மூலம் தேர்வானேன், ஆனால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருக்கும் கதை மேல் வேறு ஒரு பார்வை இருந்ததால் படம் நின்று விட்டது, ஆனால் நான் அதற்காக கவலைப்படவில்லை. அந்த படத்தில் நடித்த ஐந்து நாட்களில் பல விசயங்களை கற்றுக்கொண்டேன், மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.
 
நடிப்பதோடு தயாரிப்பிலும் ஈடுபடுவது ஏன்?
 
நடிகராக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன், என் தேடல் மற்றும் பயணமும் அதை நோக்கி தான் இருக்கும். ஆனால், தயாரிப்பு என்பது என்னை ஒரு நாயகனாக முன்னிறுத்துவதற்கான ஒரு முயற்சி தான். தயாரிப்பாளர் என்றவுடன் ஏதோ பல கோடிகளை போட்டு நான் படம் தயாரிக்கப் போவதில்லை, நான் சுமார் 100 விளம்பர படங்களை தயாரித்திருக்கிறேன். அதன் மூலம் எனக்கு தயாரிப்பு பணியிலும் அனுபவம் இருக்கிறது, அந்த அனுபவத்துடன், என் சினிமா நண்பர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியில் தான் படம் தயாரிக்கப் போகிறேன். அதுவும், தேவ் ராம்நாத் என்ற நடிகருக்காக தான்.  இங்கு வாய்ப்புக்காக காத்திருந்தால் காலம் தான் ஓடுமே தவிர வேறு எதுவும் நடக்காது. பல படங்களில் நான் நடித்த முக்கியமான காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது, எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு சிபாரிசு மூலம் வேறு ஒருவருக்கு கிடைத்ததுண்டு, இப்படி பல தடைகள் இங்கு இருக்கும், அதனால் வாய்ப்புக்காக காத்திருக்காமல் எனக்கான வாய்ப்பை உருவாக்கும் முயற்சியாக தான் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறேன்.
 
திறமையை விட சிபாரிசுக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது என்கிறீர்களே, அப்படியானல் தமிழ் சினிமாவில் நெப்போட்டிஸம் இருக்கிறது என்கிறீர்களா?
 
நெப்போட்டிஸம் சினிமாவில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் இருக்கும், வெவ்வேறு வடிவங்களில் அது இருக்கும். ஆனால், அதற்காக அதை ஒரு குறையாக சொல்லிக் கொண்டிருப்பதை விட அதை கடந்து, எப்படி வெற்றி பெற வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும். நெப்போட்டிஸம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியுமா?, அதை பற்றி நான் எப்போதும் யோசித்ததில்லை. லிஜோ ஜோஸ் சார் படத்திற்காக ஒரு மாதமாக அந்த கதாபாத்திரத்திற்கு நடிகரை தேடிக்கொண்டிருந்தார்கள், ஒளிப்பதிவாளர் ஒருவர் மூலமாக என் வீடியோ அனுப்பி வைக்கப்பட்டது. அதை பார்த்ததும், அந்த வேடத்திற்கு நான் சரியாக இருப்பேன் என்று முடிவு செய்தவர், என்னை அழைத்து ஆடிசன் செய்ய சொன்னார். படத்தின் பல காட்சிகளை கொடுத்து என்னை நடிக்க வைத்து, அது பிடித்திருந்ததால் தான் எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்தார்கள், அவர்களின் முறை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பெரிய படைப்பு, முன்னணி கலைஞர்கள் இருக்கும் ஒரு படைப்பில், ஆடிசன் மூலம் தேர்வு செய்ததே மிகப்பெரிய விசயமாக இருந்தது. ஆனால், வேறு ஒரு பிரச்சனையால் அந்த படம் கைவிடப்பட்டு விட்டது, இதற்கு என்ன சொல்ல முடியும். இப்படி பல தடைகள் வரத்தான் செய்யும், அதைப் பற்றி சிந்தித்து, குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட, அதை கடந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பது தான் என் எண்ணம், அப்படி தான் நான் இத்தனை வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
 
அறிமுக இயக்குநர்களை தாண்டி வேறு எந்த இயக்குநர்கள் படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
 
எனக்கு அனைத்து இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். ஆனால், அதையும் தாண்டி இயக்குநர்கள் சுதா கொங்குரா, வெற்றிமாறன் உள்ளிட்டவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், வெற்றிமாறன் சார் போன்றவர்களின் படங்களில் நடிக்கும் போது நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்பது தான். அவர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பது தெரியும், அதற்கான முயற்சிகளாக தான் என்னுடைய தற்போதைய படங்கள் இருக்கும்.
 
தற்போது ஒரு இணையத் தொடர் மற்றும் இரண்டு படங்கள் கையில் இருக்கிறது. அந்தப் படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இயக்குநர்களை பார்ப்பதை விட கதைகளைத்தான் நான் பார்க்கிறேன், நல்ல கதைகளாக இருந்தால் எந்த வேடத்திலும் நடிக்க நான் ரெடி என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்