தமிழ் சினிமாவில் எதையாவது வித்தியாசமாக செய்துகொண்டே இருப்பவர் இயக்குனர், நடிகர் பார்த்திபன். ஆனால் அந்த வித்தியாசத்தில் சில சமயம் கிருக்குத்தனம் அதிகமாகி சொல்லவந்த விஷயம் நழுவிவிடுவதால் அவரின் பெரும்பாலான படைப்புகள் பெருவாரியான வெற்றியைப் பெறுவதில்லை.
சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதைத் தவிர அந்த படத்தின் திரைக்கதையில் வித்தியாசமாக எதுவும் இல்லாமல் படம் வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் டீன்ஸ் என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். அதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் எப்படி தன் முதல் படத்துக்கு வித்தியாசமாக விளம்பரம் செய்தார் என்பது பற்றி கூறியுள்ளார். அதில் “புதிய பாதை ரிலீஸ் சமயத்தில்தான் அபூர்வ சகோதரர்கள் படமும் ரிலீஸானது. அதனால் எல்லோரும் இப்போது படத்தை ரிலீஸ் செய்யவேண்டாம் என தயாரிப்பாளரைப் பயமுறுத்தினார்கள். ஆனால் நான் இப்போது ரிலீஸ் செய்தால் கவனம் கிடைக்கும் என்றேன். அதுமட்டுமில்லாமல் படத்துக்கு விளம்பரம் செய்யும்போது “கமல் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் எங்கள் படத்துக்கு வாருங்கள்” என்று விளம்பரம் செய்தேன். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது” எனக் கூறியுள்ளார்.