தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கடந்த 45 ஆண்டுகளாக ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறார். இடையில் அவர் சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டாலும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. இப்போது அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் அவருக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறிய வேடத்தில்தான் நடித்திருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்து அடையாளம் பெற்று, வில்லனாகி, ஹீரோவாகி, சூப்பர் ஸ்டானார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு அவருக்கு சினிமாவில் பொன் விழா ஆண்டு. இதனையடுத்து அவருக்கு பாராட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக முதலில் தயாரிப்பாளர் தாணு முயற்சி செய்தார். பின்னர் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இது சம்மந்தமாக ரஜினிகாந்தை அணுகியுள்ளது. ஆனால் ரஜினி பாராட்டு விழா எல்லாம் வேண்டாம் என்று நாசூக்காக மறுத்து விட்டாராம்.