ஆஸ்கருக்கு வராத அவெஞ்சர்ஸ்: விருது மழையில் ஜோக்கர்!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (13:14 IST)
மிக பிரபலமான ஆஸ்கர் விருதுகள் விழா பிப்ரவரியில் நடைபெற உள்ள நிலையில் அவெஞ்சர்ஸ் திரைப்படம் அதிக பரிந்துரையில் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச மதிப்பு வாய்ந்த விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 9 அன்று நடைபெற உள்ளது. விழாவில் விருது வெல்லப்போகும் படங்களின் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அவெஞ்சர்ஸ் ஒரு பிரிவில் மட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான சூப்பர்ஹீரோ படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உலகளவில் அதிக வசூல் செய்த படமாக சாதனை புரிந்தது. அந்த படத்தில் அயர்ன் மேனாக நடித்த ராபர்ட் டோனிக்கு ஆஸ்கர் கிடைக்கும் என அப்போதிருந்தே ரசிகர்கள் பலர் பேசி வந்தனர். ஆனால் ஆண்டின் இறுதியில் வெளியான டிசியின் ஜோக்கர் திரைப்படம் அனைத்து எதிர்பார்ப்புகளையும் முறியடித்துள்ளது. குழந்தைகள் பார்க்க கூடாத 18+ படமாக வெளியான ஜோக்கர் வசூலில் சாதித்ததை விடவும் விமர்சனரீதியாக பெரும் உச்சத்தை அடைந்துள்ளது.

வெனிஸ் திரைப்பட விழாவில் தங்க சிங்கம் விருதை பெற்றதும் உலகம் முழுவதும் கவனம் பெற்ற ஜோக்கர் ஆஸ்கர் விருது பட்டியலில் 11 பிரிவில் பரிந்துரையில் உள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான பிரிவில் ஜோக்கராக நடித்த ஜோக்குயின் பீனிக்ஸும் உள்ளார். அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்று பரவலாக பேசிக் கொள்ளப்படுகிறது.

பிரம்மாண்டமாக வெளியான அவெஞ்சர்ஸ் சிறந்த கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பரிந்துரையில் மட்டுமே இருந்தாலும் அந்த பிரிவில் அது வெற்றிபெறும் என கூறப்படுகிறது. இது தவிர மார்ட்டின் ஸ்கார்ஸசியின் ‘ஐரிஷ்மேன்’ 10 பிரிவுகளிலும், குவெண்டின் டொரண்டினோவின் ‘ஒன்ஸ் அபான் ய டை இன் ஹாலிவுட்’ 10 பிரிவுகளிலும், சாம் மெண்டஸ் இயக்கிய ‘1917’ 10 பிரிவுகளிலும் பரிந்துரையில் உள்ளது.

மூன்று படங்களுமே விமர்சன அளவில் பெரும் கவனம் பெற்றவை என்பதால் இந்த வருட ஆஸ்கர் விழா மிக ஆர்வத்தோடு எதிர்நோக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்