தனியார் ஓடிடி தளங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது கேரளா அரசு சார்பில் ஓடிடி தளம் ஒன்றை ஆரம்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய திரைப்படங்கள் நேரடியாகவும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருவதால் ஓடிடி தளங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இதனை அடுத்து நாளுக்கு நாள் ஓடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு பிரத்யேகமாக ஒரு ஓடிடி தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முதல்முறையாக அரசு சார்பில் ஓடிடி தளத்தை அமைத்துள்ளது கேரள அரசு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சி ஸ்பேஸ் என்று அழைக்கப்படும் இந்த ஓடிடி தளத்தில் விருது பெற்ற மலையாள படங்கள், குறும்படங்கள், ஆவண படங்கள் ஆகியவை ஒளிபரப்பாகும் என்றும் இதற்கு கட்டணமாக ஒரு படத்திற்கு 75 ரூபாய் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகம் இதனை கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசும் அதேபோல் ஓடிடி தளத்தை அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.