கீர்த்தி சுரேஷ், மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவரின் முதல் படம் ஏ எல் விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படம்தான். அதன் பின்னர் வெளியான ரஜினி முருகன் படம் அவரை முன்னணி நடிகையாக்கியது.
இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன் பின்னர் பெண்குயின், சாணிக் காயிதம் மற்றும் ரகு தாத்தா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு அவர் இந்தி சினிமாவில் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இப்போது அவர் மீண்டும் இந்தி சினிமாவில் நடிக்கவுள்ளார். பிரபல நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் இந்தியாவின் கல்விமுறைக் குறித்த விமர்சனமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. செக்டார் 36 படத்தை இயக்கிய ஆதித்யா நிம்பல்கர் இயக்குகிறார்.