கபாலி குறித்து கமல்ஹாசன் கருத்து?

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2016 (12:41 IST)
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கபாலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் வசூல் விவகாரத்தில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது. இப்படம் குறித்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்துவந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், நடிகருமான கமல்ஹாசன் கருத்து எதும் தெரிவிக்கவில்லை.


இந்நிலையில் கபாலி படம் பார்த்ததாகவும், ரஜினியின் நடிப்பை புகழ்ந்ததாகவும் கமல்ஹாசன் பெயரில் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த கடிதத்தில்......


இரண்டு நாட்களாய் முகநூலில் வந்த அனைத்து விமரிசனங்களையும் படித்துவிட்டு.. இரண்டுவித மனநிலையில் இன்று கபாலி படம் பார்த்தாகி விட்டது.

66 வயதில் ஒருவர் ஆண், பெண், குழந்தைகள் என எல்லா வயதினரையும் காலை 6 மணிக்கே திரையரங்கினில் கூட வைப்பது பெரிய சாதனையா என்ன.?
இரண்டே இரண்டு ஷு போட்ட கால்கள் திரையில் நடந்து வர.. இருக்கையில் எவரையும் அமரவிடாமல் செய்வது அதிசயமா என்ன.?

இப்படித்தான் என்ற இலக்கணத்தை மீறி.. எப்படி இருந்தாலும் எம் தலைவன் என உலக அளவில் ரசிகர்களைக் கொண்டிருப்பது பெரிய புரட்சியா என்ன.?

35 ஆண்டுகாலமாக திரைத்துறையில் வந்து காணாமல் போனவர்கள் பலர்.. இன்னும் வந்து கொண்டிருப்பவர்கள் பலர்.. இனி வரப் போகின்றவர்கள் பலர். அத்தனை பேருக்கும் ஒரே நோக்கம் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவதுதான் என்பதையே எல்லைக் கோடாக நிர்ணயம் செய்தது ஒரு பெரிய விஷயமா என்ன.?

வயதாகிவிட்டது.. தலையில் முடியில்லை.. கருப்பு நிறம்.. தமிழனில்லை.. தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை.. இது போன்ற அத்தனை எதிர்ப்புகளுக்கும் ஒற்றை பதிலாய் ஒரே சிரிப்பு.. சொல்பவர் அத்தனை பேரும் கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும்போது நினைத்துக் கொள்வது என்னவோ இவர் உருவத்தைத்தான். இது என்ன மாயமோ.?

உலகத்தரம் என்ற ஒற்றை வார்த்தையை எத்தனையோ பேர் சொந்தமாக்கிக் கொண்டிருக்கும்போது.. உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்வது ஒரு பெரிய சாதனையா என்ன.?

கபாலி.. மற்ற படங்களில் வெடிக்கும் ரஜினியின் ஸ்டைல்.. இதில் மட்டுமே நடித்திருக்கிறது.

எடிட்டிங்.. கதை.. தலித்தியம்.. ரஞ்சித் சரியாக பயன்படுத்தவில்லை.. வேகம் குறைவு.. எனப் பல பரிமாணங்களை விமரிசனங்களாகக் கண்டும்.. எதுவுமே நெஞ்சில் நிற்கவில்லை.. ரஜினியைக் கண்டபின் என்பதும் உண்மை.

தர்மத்தின் தலைவன்.. ராஜாதிராஜா.. மன்னன்.. மாப்பிள்ளை.. தளபதி.. அண்ணாமலை.. பாட்ஷா.. படையப்பா.. எந்திரன்.. சந்திரமுகி.. போன்றவைகளைத் தொடர்ந்து இன்றும் தொலைந்து போன நம் இளமைக் காலத்தை தேடிக் கண்டுபிடித்துத் தருவதென்னவோ இவருக்குத் தேவையில்லாத வேலைதான்.

எது எப்படியோ.. 65 வயதில் தாத்தாவும்..45 வயதில் அப்பனும், 15 வயதில் மகனும் நண்பர்களாக தோள்மீது கை போட்டுக் கொண்டு.. திரையில் இவரைக் காண்பித்தவுடன்.. தங்களை மறந்து கைதட்டி கூச்சலிட்டு மகிழ்ந்து வரவேற்பது இவரை மட்டுமே.. என்பதில் ஐயமில்லை.

அதற்காகவாவது இந்த மனிதர் இன்னும் கொஞ்சம் நூற்றாண்டுகள்.. சூப்பர் ஸ்டாராகவே இருந்துவிட்டு போகட்டுமே..

சாதனைகள்..
சொல்லப் படுவதில்லை.
செய்யப் படுகின்றன.

தன்னைப் பிடிக்காதவர்களைக் கூட.. தன்னைப் பற்றியே பேச வைப்பதுதான் இவர் செய்த மகத்தான சாதனை.

-கமல்ஹாசன்


இந்த கடிதம் கமல்ஹாசன் தான் வெளியிட்டாரா என்பது தெரியவில்லை. இது குறித்து அவர் கருத்து தெரிவித்திருந்தாலும் நிச்சயம் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருப்பார். ஆனால் அவரது பக்கத்தில் அப்படி ஒரு கடிதம் இல்லை. எது எப்படியோ இந்த கடிதத்தில் கூறியுள்ள கருத்துக்கள் நன்றாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்