தேர்தல் களத்தில் வெல்வது வெற்றியுமல்ல ; தோற்பது தோல்வியுமல்ல! திராவிடம் தென்னாட்டுக்கு மட்டுமோ; ஓரிரு கட்சிகளுக்கு மட்டுமோ உரியதல்ல; அது தேசம் தழுவியது. அயோத்திதாசப் பண்டிதர் முன்மொழிந்தது. நாளும் பொழுதும் இடையறாது நாட்டை உலுக்கும் மூன்று பரிசுத்த ஆவிகள். அவை, உடுக்கை அடித்து எவராலும் குடுவைக்குள் அடைக்கமுடியாத அறிவுப்பிசாசுகள்.
காந்தி, அம்பேத்கர், நேரு ஆகிய அம்மூவரும் தான் பழமைவாதம் தகர்க்கும் கருத்தியல் பேரிடிகள். புதுமை இந்தியாவைப் படைக்கும் ஞானச்சிற்பிகள். அவர்களைச் சிதைக்க முனைவது சிறுபிள்ளை விளையாட்டு! இன்று அரசமைப்புச் சட்டம்தான் நாம் ஏந்த வேண்டிய ஓராயுதம்; பேராயுதம்! இப்படி நீண்டது...அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் கருத்தாடல். தெளிந்த பார்வை! தேர்ந்த இலக்கு! சிலிர்ப்பைத் தந்தது! சிலாகிக்க வைத்தது!
ஆடைகொண்டு போர்த்த வேண்டாம்; உடலைக் கொண்டு போர்த்துங்கள்"என்று சொல்லிக்கொண்டே என்னை ஆரத்தழுவி அணைத்துக்கொண்ட அவரின் பெருமூச்சில் அன்பின் கதகதப்பை உணர முடிந்தது. உள்ளம் முழுதாய் உறைந்து நின்றது. இடைவெளி இல்லாது இறுக அணைப்பதில் தானே சகோதரத்துவம் துளிர்விடும்! சகோதரத்துவம் போற்றும் சகலகலாவல்லவன் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்."