தமிழ் சினிமாவுக்கு அளப்பரிய பங்களிப்பை செய்த கலைஞர்களில் ஒருவர் கமல்ஹாசன். நடிகராக மட்டும் இல்லாமல் கதை, திரைக்கதை, நடனம், பாடல்கள், இயக்கம் என பல தளங்களில் கமல்ஹாசன் பங்காற்றியுள்ளார். சினிமா உலகில் புதிதாக எந்த தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் பரீட்சித்து பார்ப்பவராகக் கமல்ஹாசன் இருந்துள்ளார்.
அவரின் பல பரிசோதனை முயற்சிகள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்துள்ளன. ஆனால் காலம் கடந்து அவை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றன. அவர் அரசியலில் இறங்கியதற்குப் பின்னர் அவரின் சினிமா வாழ்வில் ஒரு தேக்க நிலையை சந்தித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் அவர் நடிப்பில் வெற்றி பெற்ற படமென்றால் அது விக்ரம் மட்டும்தான்.
இதற்கிடையில் திமுக கூட்டணியில் இருக்கும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி அவர் பதவியேற்கவுள்ளார். இதையடுத்து தனது சக நடிகரும் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் கமல். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.