சின்ன பட்ஜெட்தான்.. சிறப்பான சம்பவம்..! – தமிழ் சினிமாவை கலக்கிய டாப் அறிமுக இயக்குனர்கள்!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (08:28 IST)
கோலிவுட்டில் சின்ன பட்ஜெட்டில் அறிமுக இயக்குனர்களால் இயக்கப்பட்டு ஆனால் பெருமளவில் வரவேற்பை பெற்ற டாப் படங்களை பார்க்கலாம்.


 
இந்தியாவில் அதிகமான கோடிகளை முதலீடு செய்யும் ஏரியாக்களில் பாலிவுட்டிற்கு பிறகு கோலிவுட் முக்கியமான இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் பல பிரபல ஹீரோக்களின் படங்கள் வெளியாகி பல கோடிகளை வசூல் செய்து வரும் நிலையில் சின்ன பட்ஜெட்டில் அறிமுக இயக்குனர்கள் இயக்கும் படங்களும் திரையரங்குகள் மற்றும் ஓடிடி வாயிலாக கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த 2023ம் ஆண்டில் கவனம் ஈர்த்த புதுமுக இயக்குனர்களின் படங்கள் சில

குட் நைட்



இளம் நடிகர் மணிகண்டன் நடித்து விநாயக் சந்திரசேகரன் இயக்கிய காமெடி கலந்த காதல் திரைப்படம். குறட்டை பழக்கம் விடும் நாயகன். அதனால் அவனுக்கு ஏற்படும் சிக்கல்களை எப்படி சமாளிக்கிறான். இந்த குறட்டை சத்தத்தால் அவனது காதல் வாழ்க்கை எப்படி பாதிப்படைகிறது என்பதையும், அதை தாண்டி அவர்களுக்கான காதலை அவர்கள் கண்டடைவதையும் காமெடி கலந்த காதலுடன் அழகாக சொல்லியிருந்தனர்.

நாயகியாக மீதா ரகுநாத், மணிகண்டன் மாமாவாக ரமேஷ் திலக் நடிப்பில் அசத்தியிருந்தனர். ஷான் ரோல்டன் இசையில் வெளியான இந்த படம் திரையரங்கு, ஓடிடி இரண்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அயோத்தி



பிரபல நடிகர் சசிக்குமார் நடித்து மந்திரமூர்த்தி இயக்கிய படம் அயோத்தி. ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வரும் வட இந்திய குடும்பம் ஒன்று எதிர்பாராத சூழலில் சிக்க அவர்களுக்கு ஹீரோ சசிக்குமார் உதவுகிறார். வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது அயோத்தி. படத்தின் மூலம் மதவெறி பிரச்சினைகள், மனிதாபிமானம் போன்றவற்றை விவாதித்த விதம் பாராட்டுகளை குவித்தது. சமீபத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அயோத்தி திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

போர் தொழில்



அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடித்த படம் போர் தொழில். திருச்சி மாநகரை சுற்றி திடீரென நடக்கும் தொடர் படுகொலைகளை குறித்து விசாரிக்க சீனியர் ஆபிசர் சரத்குமாரும், இளம் ஐபிஎஸ் ஆபிசர் அசோக் செல்வனும் செல்கின்றனர். இந்த கொலைகளுக்கு காரணம் ஒரு சைக்கோ என தெரிய வருகிறது. அந்த சைக்கோ யார் என கண்டுபிடிப்பது சுவாரஸ்யமான கதை.

நெடுநாட்களுக்கு பின்னர் ஹீரோவுக்கு இணையான கதாப்பாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். திரையரங்கில் வெளியானபோதே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மூத்த நடிகர் சரத்பாபு வித்தியாசமான தோற்றத்திலும், நடிப்பிலும் பலரது கவனத்தை ஈர்த்தார். சைக்கோ வில்லனாக சுனில் சுகாடாவின் நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டது.

யாத்திசை



இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சக்தி மித்ரன், சேயோன் ஆகியோர் நடித்த படம் யாத்திசை. வரலாற்று காலக்கட்ட படமான யாத்திசை வரலாற்றில் பாண்டியர்களுக்கும், எயினர்கள் என்னும் பழங்குடி மக்களுக்கும் நடந்த போரை மையப்படுத்தி அமைந்தது. படம் முழுவதும் பண்டைய கால தமிழ் வழக்கு மொழி பயன்படுத்தப்பட்டிருந்தது.

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியான அதேசமயத்தில் வெளியான இந்த படம் தமிழர்கள் வாழ்வியலை ஆவணப்படுத்தியதாக பெரிதும் பாராட்டுகளை பெற்றது.

டாடா



பிக்பாஸ் புகழ் கவின் நடித்து கணேஷ் கே பாபு இயக்கிய படம் தாதா. கல்லூரி படிக்கும் கவினால் அவரது காதலி (அபர்ணா தாஸ்) கர்ப்பமாகிறார். இருவரும் சேர்ந்து வாழும் நிலையில் குழந்தை பிறந்ததும் அவரையும், குழந்தையையும் விட்டு நாயகி பிரிகிறார். அந்த குழந்தையை நாயகன் எப்படி வளர்க்கிறார் என்பதுதான் கதை.

கவினுக்கு இந்த ஆண்டில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது இந்த படம். திரையரங்கில் வெளியாகி ஹிட் அடித்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் பலரது கவனத்தை பெற்றது.

பார்க்கிங்



இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற படம் பார்க்கிங். ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடித்த இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

புதுமண தம்பதிகளான ஈஸ்வர் (ஹரிஷ் கல்யாண்), ஆதிகா (இந்துஜா) புதிதாக ஒரு அபார்ட்மெண்டுக்கு குடி வருகிறார்கள். ஆதிகா கர்ப்பமாக இருப்பதால் அவரை அழைத்து சென்று வர ஈஸ்வர் ஒரு கார் வாங்குகிறார். ஆனால் அதை நிறுத்துவதற்கான இடம் குறித்து அவருக்கும் அதே பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்) இடையே மோதல் எழுகிறது. இதை வைத்து காமெடி கலந்த குடும்ப பாங்கான கதையை அளித்திருந்தனர்.

டிடி ரிட்டர்ன்ஸ்



சந்தானம் நடிப்பில் புதுமுக இயக்குனர் ப்ரேம் ஆனந்த் இயக்கிய காமெடி பேய் படம். தில்லுக்கு துட்டு வகை காமெடி பேய் கதைதான். ஆனால் அதில் காமெடி ட்ராக்குகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.

ப்ரான்சிஸ் அன்பரசு என்ற பிரபல ரிட்டயர்டு போலீஸ் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் அதை ஒரு பளைய பங்களாவில் புதைத்து வைக்க போக அங்குள்ள பேய்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். பேய் வைக்கும் போட்டிகளில் வென்று அங்கிருந்து அவர்கள் உயிருடன் வெளியேறினார்களா என்பதை முழு காமெடி த்ரில்லராக எடுத்திருந்தார்கள்.

பெப்சி விஜயன், கிங்ஸ்லி, ப்ரதீப் ராம் சிங் ராவத், தங்கதுரை, ராஜேந்திரன் உள்ளிட்ட காமெடி பட்டாளமே நடித்திருந்த இந்த படம் சிரிக்க வைக்க தவறவில்லை.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்