அஜித், சிவா காம்போ வொர்க் அவுட் ஆனது எப்படி ?– வீரம், வேதாளம் லிஸ்ட்டில்… விஸ்வாசம் !

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (13:29 IST)
அஜித் சிவா இருவருக்கும் இடையே நல்ல அலைவரிசை இருப்பதாகவும் அதனால்தான் அவர்களால் தொடர்ந்து 4 படங்களில் வேலை செய்து வெற்றிப் பெற முடிவதாகவும் இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அஜித் முதல்முறையாக சிறுத்தை சிவாவோடு வீரம் படத்தில் இணைந்தார். முரட்டுக்காளையை லேசாகப் பட்டி டிங்கரிங் பார்த்து உருவாக்கப்பட்ட கதை தான் என்றாலும், முதன் முதலாக வேட்டி சட்டையில் (படம் முழுவதும்) அஜித். நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் நடித்த பேமிலி செண்ட்டிமெண்ட் படம் எனப் சிலக் காரணங்களால் படம் ரசிகர்களை ஈர்த்தது. தமிழ் சினிமாவின் தேய்வழக்கான திரைக்கதைதான் என்றாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படத்திற்கு குடும்பமாக வந்து படம் பார்க்க ஆரம்பித்தனர். அங்குதான் தொடங்ககியது அஜித் – சிவா காம்போவின் தொடக்கப்புள்ளி. சுமாரானப் படமாக இருந்ததாலும் வீரத்தின் பரம்மாண்ட வெற்றிக்கு  அதே நாளில் வெளியான விஜய்யின் ஜில்லா ரொம்ப சுமாராகப் படமாக இருந்ததும் ஒரு காரணம். அதனால், வீரம் அந்த பொங்கலை முழுவதும் தன் வசப்படுத்தியது.

அதையடுத்து ஓராண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த கூட்டணியில் தீபாவளிக்கு வெளியானது வேதாளம். வழக்கமான அஜித்தின் டிரேட்மார்க் ரௌடி வேதாளம் கதாபாத்திரம்  மற்றும் பாசமான அண்ணன் கணேஷ் கேரக்டர் என இரண்டு வேரியேஷனில் கலந்து கட்டி அடித்தார் அஜித். அனிருத்தின் துள்ளலான இசையும் கூட சேர்ந்து கொள்ள படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. அதுநாள் வரை அஜித் படத்திற்கு வர ஆர்வம் காட்டாத இளம்பெண்களை தனது தங்கை செண்ட்டிமெண்ட் மூலம் கவர்ந்தனர் சிவாவும் அஜித்தும். தங்கை மீது பாசம் கொண்ட அண்ணனான நடித்திருந்த அஜித்தின் வசனங்களுக்கு விசிலடித்து ரசித்தனர் பெண்கள். தீபாவளிக்குப் போட்டியாக வந்த தூங்காவனம் மற்றும் தொடர்மழை என எல்லாத் தடைகளையும் தாண்டு வேதாளம் வசூல் சாதனை செய்தது. இன்று வரையில் அஜித்தின் அதிக வசூல் சாதனை செய்தப் படமாக வேதாளம் இருந்து வருகிறது.

வேதாளத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் உடனடியாக அறிவிக்கப்பட்டது விவேகம் படம். தங்கள் வழக்கமான ரூட்டில் இருந்து விலகிச் சென்று இண்டர்நேஷனல் ஸ்பை த்ரில்லர் எனும் ஜானரில் ஆயுத பூஜைக்கு சோலாவாக இறங்கியது விவேகம். பல்கேரியாவில் ஷூட்டிங், ராணுவ ரகசியம், வலுவான வில்லன் இல்லாதது, கணவன் மனைவி செண்ட்டிமெண்ட் என ஓவராக நெஞ்சை நக்கியது எனப் பலக் காரணங்களால் ஹிட் லிஸ்ட்டில் சேராமல் போனது விவேகம். விவேகத்திற்காக அஜித் கஷ்டப்பட்டு தன் உடலை மெருகேற்றி ஷர்ட் ஆஃப் எல்லாம் செய்தும் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

அதையடுத்து ஒன்றரை வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வருகிறது  விஸ்வாசம். விவேகத்தில் தங்கள் மைனஸையும் வீரம். வேதாளத்தில் தங்கள் பிளஸ்ஸையும் தெரிந்து கொண்ட காம்போ இந்தமுறை குடும்ப செண்ட்டிமெண்ட், தேனி வட்டார வழக்கு போன்றப் பல சாதகமான அம்சங்களோடு வருகிறது. அது மட்டுமில்லாமல் இம்முறை குழந்தைகளையும் கவர வேண்டுமேன முடிவு செய்து அஜித்துக்கும் அவரது மகளுக்கும் இடையில் நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான  சீக்வென்ஸ்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளனர். அதனால் இம்முறை அஜித், சிவா இருவரின் குறியும் தப்பாது என இப்போதே ஆருடம் சொல்கின்றனர், விஷயமறிந்தவர்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்