அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
படத்தில் கதை என்பதோ, சுவாரஸ்யமான திரைக்கதை என்பதோ மருந்தளவுக்கும் இல்லை. அஜித்தின் முந்தைய ஹிட் படங்களின் இமேஜ்களை படத்தில் ஆங்காங்கே சொருகி அஜித் ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டி விட்டுள்ளார் ஆதிக். படம் முழுவதும் அஜித் கதாபாத்திரத்தை மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் வானளாவ புகழ்ந்து தள்ளுகின்றன. அவர் கூட கதாபாத்திரங்கள் கொடுக்கும் பில்ட் அப் களை விட வில்லன்கள் கொடுக்கும் பில்ட் அப் ஓவரா கூவுறாண்டா என்பது போல இருக்கிறது.
இதுவரை நாம் பார்த்து வந்த கமர்ஷியல் படங்களில் ஹீரோ புத்திசாலித் தனமாக எதாவது செய்த பின்னர், அல்லது ரசிக்கும் படியான ஒரு பன்ச் வசனம் பேசினாலோ ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். ஆனால் இந்த படத்திலோ ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு என்பது ஆர்கானிக்காக இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி வி பிரகாஷின் ஹை வால்யூம் இசையெல்லாம் காதைப் பொத்திக்கொண்டுதான் கேட்கவேண்டும் என்பது போல உள்ளது.
இப்படி இருந்தும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருவதுதான் உண்மையான சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது.இந்த படத்தின் வெற்றி இதுபோல பல படங்களை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. திரைக்கு வெளியில் மிஸ்டர் க்ளீனாக, தன்னடக்கமானவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் அஜித், திரையில் அதற்கு நேர் எதிரான கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். போதாக்குறைக்கு இந்த படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் AK. ரசிகர்களுக்கு திரைக்கு வெளியில் அட்வைஸ் செய்யும் அஜித், திரைக்குள் நல்ல திரையனுபவம் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்காமல் உப்பு சப்பு இல்லாத கதைகளை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு மோசமான படங்களாகக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?