அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கி வருகிறது. படத்தில் கதை என்பதோ, சுவாரஸ்யமான திரைக்கதை என்பதோ மருந்தளவுக்கும் இல்லை. அஜித்தின் முந்தைய ஹிட் படங்களின் இமேஜ்களை படத்தில் ஆங்காங்கே சொருகி அஜித் ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டி விட்டுள்ளார் ஆதிக்.
முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் இந்த படம் இந்திய அளவில் சுமார் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகவும், உலகளவில் வசூல் 150 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் குட் பேட் அக்லி திரைப்படம் ப்ளாக்பஸ்டர் லிஸ்ட்டில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் இன்றும் படத்துக்கு நல்ல வசூல் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அவரே பதிலளித்துள்ளார். அதில் “இப்போது நான் குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அஜித் சாரும், வாழ்க்கையும் எனக்கு இன்னொரு முறை அந்த வாய்ப்பை அளித்தால் நான் இதேக் குழுவினரோடு அந்த படத்தில் இணைந்து பணியாற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.