தமிழக விவசாயிகளுக்காக ‘நமது நெல்லை காப்போம்’ என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சேவைகளை செய்து வந்தவர் ஜெயராமன். நெல் தொடர்பான சேவைகள் என்பதால் ‘நெல்’ ஜெயராமன் என்றே அனைவராலும் கொண்டாடப்பட்டவர்.
எதிராபாராத வகையில் அவரை புற்றுநோய் தாக்கியது. அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று பல்வேறு நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், காவல்துறையினர் என நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். பல தரப்பிலிருந்து பண உதவிகளும், பிரார்த்தனைகளும் குவிந்து வரும் வேளையில், முதல் ஆளாக சிவகார்த்திகேயன் கை கொடுத்தார்.
இதேபோல் சத்யராஜ், கார்த்தி, சூரி என பலரும் உதவி செய்தனர். இதற்கிடையே சிவகாரத்திகேயன் நெல் ஜெயராமனை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவருக்கு வேண்டிய மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டதுடன், அவரது மகனுக்கான கல்வி செலவையும் ஏற்றுக்கொண்டார். இதனிடையே அண்மையில் மருத்துவமனைக்கு வந்த சிவகார்த்திகேயன், ‘நெல்’ ஜெயராமனின் காலைத் தொட்டு வணங்கியிருக்கிறார்.
மேலும், அவரது கைகளை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு “நல்லாயிருப்பீங்க. நான் உங்க புள்ள மாதிரி. எதுக்கும் கவலைப்படாதீங்க. ஒரு பிரச்சினையும் இருக்காது. இவ்வளவு நெல் ரகங்களைக் காப்பாற்றியிருக்கும் நீங்கள், ஏதாவது ஒரு நெல் ரகத்துக்கு காப்புரிமை வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்க கோடீஸ்வரன். அனைத்துமே எனக்கு தெரியும். உங்களைப் பற்றி நிறையப் படிச்சுருக்கேன்” என்று ஆறுதல் கூறியுள்ளார்.