மறைந்த நடிகர் சி.எல். ஆனந்தனின் மகளான சாந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் 80 களிலும் 90 களிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். பெரும்பாலும் பாடல்களில் கவர்ச்சி நடனம் ஆடிய அவர் அவரது நடனத்துக்காகவே டிஸ்கோ சாந்தி என்றழைக்கப்பட்டார்.
100க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கும் நடனமாடியுள்ள டிஸ்கோ சாந்தி கடந்த 1996 ஆம் ஆண்டு, தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் இப்போது 27 ஆண்டுகள் கழித்து அவர் புல்லட் படம் மூலமாக ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க அவரது தம்பி எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் புல்லட் படத்தில் டிஸ்கோ சாந்தி ஒரு பிளாக் மேஜிக் நிபுணராக நடித்துள்ளார். சமீபத்தில் ரிலீஸான அதன் டீசரில் டிஸ்கோ சாந்தி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். நீண்ட காலத்துக்குப் பிறகு அவரை திரையில் பார்த்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.