கபாலியை காலி செய்ய நினைத்தார்கள்; முடியவில்லை : ரஞ்சித் ஓபன் டாக்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (11:17 IST)
கபாலி படத்தின் மூலம் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டதாகவும், அதனால் தனக்கு வெற்றிதான் என்று இயக்குனர் ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் கபாலி. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், உலகமெங்கும் வசூலை வாரி குவித்துள்ளது. 
 
இந்நிலையில், கபாலி படம் குறித்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. அதில் பல்வேறு பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
இந்த கூட்டத்தில் ரஞ்சித் பேசும்போது “இந்த படத்தை எதற்காக எடுத்தேன் என்பதன் நோக்கம் நிறைவேற்றிவிட்டது. இந்த படம் வெளியான அன்றே “ படம் சரியில்லை” என்று கூறி காலி செய்ய நினைத்தார்கள். அதை நான் எதிர்பார்த்தேன். ஆனால் மக்கள் வெற்றி பெற செய்து விட்டார்கள்.
 
இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஏனெனில், அப்போதுதான், இதுபோல் படங்கள் வரும். தோல்வி அடைந்தால், வேறு யாரும் முயற்சி கூட செய்து பார்க்க மாட்டார்கள்.
 
அட்டக்கத்தி தோல்வி அடைந்திருந்தால், என் கருத்துக்களை தூக்கி ஓரமாக போட்டு விட்டு, வெற்றி பெறும் படங்களை இயக்கியிருப்பேன். ஆனால், அட்டக்கத்தி வெற்றி பெற்றது. அதனால்  ‘மெட்ராஸ்’ எடுத்தேன். அதுவும் வெற்றி பெற்றதால் கபாலி எடுத்தேன். மேலும், இதுபோல் படங்கள் எடுப்பேன்.
 
கபாலிக்கு எதிராக விமர்சனம் எழுதினார்கள். படம் சரியில்லை என்று பேசினார்கள். ஆனல் அனைத்தையும் முறியடித்து இப்படம் வெற்றி பெற்றுள்ளது. 
 
எனது கருத்தை கூற ரஜினியின் பிம்பம் எனக்கு தேவைப்பட்டது. அவரின் குரலின் சத்தம், வீரியம் அனைவருடைய காதையும் கிழித்திருக்கிறது என நினைக்கிறேன். அடுத்ததாக அனைவருடைய வீடுகளிலும் உள்ள தொலைக்காட்சிகளிலும் அந்த குரல் ஒலிக்கும். 
 
இந்த படம் குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் குறித்து எனக்கு மகிழ்ச்சிதான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்