ஒரு வாரத்திற்குள் விஷால் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - தயாரிப்பாளர்கள் சங்கம்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (10:53 IST)
நடிகர் விஷால் தனது பேச்சுக்கு ஒரு வாரத்திற்குள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், கத்திச்சண்டை தவிர்த்த அவரது பிற படங்கள் எதற்கும் ஒத்துழைப்பு தர மாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 
 
வாரப்பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த விஷால், அடுத்தது தயாரிப்பாளர்கள் சங்கம்தான் என்று கூறியிருந்தார். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைப் போன்று அடுத்தகுறி தயாரிப்பாளர்கள் சங்கம் என்று சொன்னதை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இப்போதைய நிர்வாகிகளும், அவர்களது ஆதரவாளர்களும் அவமரியாதையாக கருதுகின்றனர். 
 
சென்னையில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில் விஷால் ஒரு வார காலத்திற்குள் வருத்தம் தெரிவிக்க  வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
'நமது சங்க உறுப்பினர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தினை அவமரியாதை செய்யும் வகையில் பேட்டியளித்துள்ளார். அதனை இந்த ஆலோசனை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. அதன் அடிப்படையில் இன்றில் இருந்து ஒரு வாரக் காலத்திற்குள் விஷால் தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் தீபாவளி வெளியீடாக அறிவித்துள்ள கத்திச்சண்டை திரைப்படம் தவிர்த்து மற்ற அவர் நடிக்கும் எந்த தமிழ் திரைப்படங்களுக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை' என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்