இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்களான என் ஜி கே மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவரின் பழையப் படங்களான புதுப்பேட்டை, காதல் கொண்டேன் மற்றும் 7 ஜி ரெயின்போ காலணி உள்ளிட்ட படங்களை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதுப்பேட்டை திரைப்படம் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் நினைவுகூர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
2006 ஆம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை திரைப்படம் அப்போது வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் ஆண்டுகள் செல்ல செல்ல ஒரு கல்ட் கிளாசிக் படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 26 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படம் மெருகேற்றப்பட்டு 4K தரத்தில் ரி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் ஒரு திரையரங்கில் ரி ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.