கோயம்பேடு ரோஹினி தியேட்டரில் குறைந்தபட்ச டிக்கெட் விலை 40 ரூபாயாகவும் அதிகபட்சமாக 100 ரூபாயும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த தியேட்டரில் இந்த விலையை அவர்கள் பின்பற்றுவதில்லை. தியேட்டருக்கு நேராக சென்று டிக்கெட் எடுத்தாலும் புக்கிங் சார்ஜ் என சொல்லி 10 ரூபாய் பிடித்தம் செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி, சென்னையைச் சேர்ந்த செம்பியம் தேவராஜன் சம்மந்தப்பட்ட தியேட்டரில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு சென்றபோது டிக்கெட் கட்டணம் 150 ரூபாய், முன்பதிவு கட்டணம் 35 ரூபாய் 40 பைசா என மொத்தமாக 185 ரூபாய் 40 பைசா அவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ரோகிணி திரையரங்க கட்டண கொள்ளையால் தனக்கு ஏற்பட்ட நேர விரயம் மற்றும் மன உளைச்சலுக்காக இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். ஒருவருடமாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தேவராஜனுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும், மன உளைச்சலுக்காக 5 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக 15000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இது அவரிடம் இருந்து வசூலித்த தொகையை 100 மடங்கு அதிகமாகும்.