தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய கூலி படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. விமர்சனங்கள் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஏனென்றால் படம் வெளியாகி 10 நாட்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
கூலி படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழந்தைகளோடு செல்ல முடியவில்லை என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இது வசூலில் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்துக்கு UA சான்றிதழ் வழங்க சொல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் சென்சார் தரப்பில் வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் சென்சாருக்கு விண்ணப்பித்து UA சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்” என வாதாட, சன் பிக்சர்ஸின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.