நடிகை அமலாபால் கார் பதிவில் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து அதுகுறுத்து விசாரிக்க பாண்டிச்சேரி ஆளுனர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்நிலையில் அமலாபால் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு, தேசிய கொள்கைகளை முன் நிறுத்தி மலபார் பகுதியின் சுதந்திர போராட்ட வீரர்களால் உருவமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியமிக்க தின பத்திரிகை பொது மக்களின் கவனத்தை ஈர்க்கவும், விற்பனையை அதிகரிக்கவும் இத்தகைய மேம்போக்கான வழிகளை கையாண்டிருப்பது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
சட்டத்தை மதிக்கும் இந்திய பிரஜையான நான் நடப்பு ஆண்டில் ரூ.1 கோடிக்கும் மேலாக வரி செலுத்திய பின்னும், அதுவும் தற்பொழுது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு முறைகேடும் கண்டறியப்படாத நிலையில், என் மீதும் என் குடும்பம் மீதும் குறிவைத்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளாலும் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராக நான் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஒரு இந்திய குடிமகளாக நான் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானும் சென்று வேலை செய்யவும், சொத்துகள் வாங்கவும் உரிமை இருக்கிறது. குறுகிய நோக்கில் சின்ன சின்ன ஆதாயங்களுக்காக சட்ட - திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிற இந்தியர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்த்து, நாம் நம்மை எதிர்நோக்கியுள்ள வறுமை, ஊழல், கல்வியறிவின்மை, அநீதி போன்ற சமூக ஏற்ற தாழ்வுகளை களைய போராடுவோம்.