உங்களை போன்ற ரசிகர்கள் கிடைக்க தவம் செஞ்சிருக்கணும்! – வருத்தம் தெரிவித்த விக்ரம்!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (11:50 IST)
திருச்சியில் கோப்ரா பட ப்ரொமோஷனுக்கு சென்ற நடிகர் விக்ரமை காண குவிந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் விக்ரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “கோப்ரா”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் ஆகஸ்டு 31ம் தேதியன்று ரிலீஸாக உள்ள நிலையில் பட ப்ரொமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் விக்ரம் விமானம் மூலமாக திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டபோது அங்கு அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு எழுந்தது.

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படை போலீஸார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம் “இன்று கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்கு திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள்.

அதே வேளையில் சில விரும்பதகா சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்க்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இப்படியிருக்க மதுரையில் நடந்த கோப்ரா பட ப்ரொமோஷன் விழாவிலும் ஏராளமான ரசிகர்கள் கூடியதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தால் பலரும் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்