2018 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது அடுத்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது.
உலகளவில் வழங்கப்படும் திரை விருதுகளில் ஆஸ்கார் விருதும் மிக முக்கியமான விருது. ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்களுக்கு பலப் பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டுப் படங்களுக்கும் தனிப்பிரிவில் விருது வழங்கப்படுகிறது.
இந்தாண்டு விருதுக்கான பட்டியலில் தமிழர் ஒருவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கோவையைச் சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலம் என்பவரைப் பற்றிய ’பீரியட். என்ட் ஆஃப் செண்ட்டன்ஸ்’ என்ற ஆவணப்படம் போட்டிபிரிவின் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இல்லாததும், மாதவிடாயை தீட்டு எனத் தள்ளி வைக்கும் வழக்கமும் இன்னமும் பல மாநிலங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதவிடாயின் போது முறையான நாப்கின்களை உபயோகிக்காமல் இருக்கும் வழக்கமும் உள்ளது. அந்த மூடநம்பிக்கைகளை ஒழிக்க குறைந்த விலையில் சுகாதாரமான முறையில் சானிட்டரி நாப்கின்களை உருவாக்கி இந்தியா முழுவதும் அதைப் பரவலாக பரப்பியவர் முருகானந்தம். இவரது இந்த அசாத்தியப் பணி குறித்து விளக்கும் ஆவணப்படத்தினை இயக்குனர் ரேய்கா ஜெட்டாப்சி எடுத்துள்ளார். இந்தப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
முருகானந்தத்தின் வாழ்க்கையை தமிழக இயக்குனர் பால்கி அக்ஷய் குமார் நடிப்பில் பேட்மேன் என உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.