நான் மிகவும் அனுபவித்து இந்தப் பணியைச் செய்தேன் - கௌதம் மேனன்

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (17:58 IST)
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும், 'கிராடரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசனும் ஒன்றிணைந்து 'குயின் ' என்று பெயரிடப்பட்ட இணையதளத் தொடர் ஒன்றை வழங்கவிருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இணையத் தொடர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பும், முதல் எபிசோட் திரையிடலும் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், "உண்மையில் நான் மிகவும் அனுபவித்து இந்தப் பணியைச் செய்தேன். காரணம் காலக் கட்டுபாடு எதுவும் இதில் இல்லை. மேலும் இந்த ஓடிடி தளமே, கதை சொல்லலுக்கேற்ற நல்ல மற்றும் சரியான வடிவம் என்று நினைக்கிறேன். முதல் சீசன் பதினோரு பாகங்களாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இப்போது இரண்டாம் சீசனுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம். மொபைல் போனில் இத்தொடரைப் பார்க்க முடியும் என்றாலும், சின்னத் திரையிலே இதைப் பார்க்க முயலுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்" என்றார்.
 
இயக்குநர் பிரசாத் முருகேசன் பேசுகையில்,
 
"ரேஷ்மா கட்டாலா எழுதிய இந்த ஸ்க்ரிப்ட்தான் நாங்கள் இதை வலைதளத் தொடராக்க முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஸ்க்ரிப்டைப் படித்ததுமே இதன் காட்சி வடிவம் எப்படி இருக்கும் என்பதை சுலபத்தில் என்னால் உணரமுடிந்தது" என்றார்
 
நடிகை விஜி சந்திரசேகர் பேசும்போது குறிப்பிட்டதாவது...
 
"சூர்யா என்ற வேடத்தில் இதில் நான் நடிக்கிறேன். இத்தொடரில் நானும் ஒரு பங்காக இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் புதுமையான அனுபவத்துக்காக நானும் ஆவலோடு இருக்கிறேன்" என்றார்.
 
அஞ்சனா பேசும்போது 
 
"சக்தி வேடத்தில் நான் நடித்த பகுதி எனக்கு உள்ளார்ந்த உந்து சக்தியாக இருந்தது" என்றார்
 
 
சக்தி வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தனது உரையின்போது,
 
"இந்த ஸ்க்ரிப்டும், இதில் பாத்திரப் படைப்புகள் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் ஈர்க்கத் தக்கதாக இருந்தது" என்றார்.
 
டிசம்பர் 14 முதல் எம்.எக்ஸ்.பிளேயரில் குயின் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்