ஒரு வடக்கன் செல்பி படத்தில் நடித்த மஞ்சிமா மோகன் கௌதமின் அச்சம் என்பது மடமையடா மூலம் தமிழுக்கு வந்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் படத்திலும் இவர்தான் நாயகி. தனது பட அனுபவங்கள் குறித்து மஞ்சிமா மோகன் பகிர்ந்து கொண்டார்.
தமிழப்பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?
ஒரு வடக்கன் செல்பி படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து கௌதம் என்னை போனில் தொடர்பு கொண்டார். அவர் எடுக்கப் போகிற படத்தின் நாயகி தேர்வுக்காக அழைத்தார். அப்படித்தான் அச்சம் என்பது மடமையடா வாய்ப்பு கிடைத்தது.
சிம்புடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
சிம்பு படப்பிடிப்புத் தளத்தில் நிறைய வேடிக்கை செய்து கொண்டே இருப்பார். அவரால் நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். முக்கியமான காட்சிகளின் போது கூட என்னால் சிரிப்பை நிறுத்த முடிவதில்லை. அந்த அளவுக்கு சிம்புவின் காமெடி இருக்கும். எல்லோரும் என்னைப் பார்க்கிறார்களே என்பது பற்றிக் கூட கவலைப்படாமல் நான் சிரித்துக் கொண்டே இருப்பேன். இதனால் சிம்புவுடன் இணைந்து நடிப்பது கடினமாக இருந்தது. ஆனால் சிம்புவிற்கு எந்த ஒரு காட்சியும் கடினமானது அல்ல.
குழந்தை நட்சத்திரமாக நடித்தது நினைவிருக்கிறதா?
நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது மலையாளத்தில் அவ்வளவாக குழந்தை நட்சத்திரங்கள் இல்லை. கேரள அரசின் விருதுகூட அப்போது எனக்கு கிடைத்தது. ஆனால், அதன் முக்கியத்துவம் அப்போது எனக்கு தெரியாது. ஒரு வடக்கன் செல்பியில் நடித்த பிறகுதான் அதன் முக்கியத்துவம் தெரிய வந்தது. இன்னும் என்னை குழந்தை நட்சத்திரமாக நினைவில் வைத்திருப்பவர்கள் கேரளாவில் அதிகம்.
உங்கள் நண்பர்கள்?
எனக்கு அவ்வளவாக நண்பர்கள் இல்லை. இப்போதைக்கு அச்சம் என்பது மடமையடா படக்குழுதான் நண்பர்கள். சினிமாவில் கீர்த்தி சுரேஷை சின்ன வயதிலிருந்தே தெரியும்.
போட்டியாக யாரை நினைக்கிறீர்கள்?
எல்லோருமே போட்டிதான். தினம் ஒரு ஹீரோயின் வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் குறிப்பிட்டு இவர்தான் என்று ஒருவரை சொல்ல முடியாது. எனக்கு வரவேண்டிய படங்கள் எனக்குதான் வரும். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.