திருமணத்துக்கான நேரம் அமைவது முக்கியம் - அனுஷ்கா பேட்டி

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (11:27 IST)
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக 20 கிலோ உடை அதிகரித்த அனுஷ்கா அதனை குறைக்க முடியாமல் மருத்துவ உதவியை  நாடினார், அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உடல் எடை முதல்  திருமணம்வரை கான்ட்ரவர்சியான கேள்விகளுக்கு அனுஷ்கா அளித்த பதில்கள் வருமாறு...


 
 
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக ஏற்றிய எடையை குறைக்க முடியாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக வந்த தகவல்கள்  உண்மையா?
 
யார் இப்படி பொய் தகவல்கள் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. உடல் ஆரோக்கியம் குறித்து எனக்கு நன்கு தெரியும். நான்  அடிப்படையில் ஒரு யோகா டீச்சர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக ஏற்றிய எடையை குறைக்க சிரமப்பட்டது உண்மைதான்.  டயட் மற்றும் உடற்பயிற்சி, யோகா மூலம் நான் பழைய தோற்றத்துக்கு வந்துவிட்டேன். அறுவை சிகிச்சை என்பதெல்லாம்  சிலரது கற்பனை.
 
2016 வருடம் திருப்தியாக அமைந்ததா?
 
நான் நடித்தப் படங்கள் எதுவும் டிசம்பர்வரை இந்த வருடம் வெளியாகவில்லை என்பது வருத்தமான விஷயம்தான். ஆனால்,  பாகுபலி 2, ஓம் நமோ வெங்கடேசாயா, பாக்மதி படங்கள் அடுத்த வருடம் வெளியாக உள்ளன. அதேபோல் எஸ் 3 படமும்  எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
பாகுபலி போன்ற படங்களில் நடித்துக் கொண்டே பக்தி படங்களிலும் நடிக்கிறீர்களே...?
 
ஒரு நடிகை என்றால் அனைத்து வேடங்களிலும் நடிக்க வேண்டும். அந்த சவாலை எதிர்கொள்ளவே விரும்புகிறேன். ஓம்நாமோ  வெங்கடேசாயா படத்தில் நடித்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன்.
 
உங்களுக்கு திருமணம் என்று தொடர்ந்து செய்தி வருகிறதே?
 
எனக்கு திருமணம் எப்போது என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். மாப்பிள்ளை முடிவாகி விட்டது என்றும் அடுத்த வருடம்  திருமணம் நடக்கும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர்தான் மாப்பிள்ளை என்றும்  வதந்தி பரவி இருக்கிறது.
 
அது உண்மையா?
 
என்னைப்பொறுத்தவரை திருமணத்துக்கு நான் தயாராக இருந்தாலும், அதற்கான நேரம் அமைவது முக்கியம்.
 
திருமணத்துக்கான நேரம் அமையவில்லை என்கிறீர்களா?
 
தற்போது கைநிறைய படங்கள் இருக்கிறது. அதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். இப்போது திருமணம்  செய்வதை சரியான தருணம் என்று நான் நினைக்கவில்லை.
 
பாகுபலியில் உங்கள் தேவசேனா கதாபாத்திரம் குறித்து நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த கதாபாத்திரம் பற்றி சொல்ல  முடியுமா?
 
தேவசேனா கதாபாத்திரம் நீங்கள் எதிர்பார்ப்பதைவிட புதுமையாக இருக்கும். அடுத்த வருடம் இரண்டாம் பாகம்  வெளிவரவிருக்கும் நிலையில் இதைவிட அதிகம் அது பற்றி கூற முடியாது.
அடுத்த கட்டுரையில்