விஜயசாந்திக்குப் பிறகு நாயகி மையப்படங்களில் நடிக்க தென்னிந்தியாவில் ஆளில்லாமலிருந்தது. அதனை தனது வருகையால் அடித்து நொறுக்கியவர் அனுஷ்கா. அவரது அருந்ததி முன்னணி ஹீரோவுக்கு இணையான படம்.
பணமும் அதேயளவு கொட்டியது. சினிமாவுக்கு முன்னும் பின்னுமான அவரது வாழ்க்கை குறித்த அவரது பேட்டியின் தமிழாக்கம்...
சினிமாவுக்கு முன்பு உங்கள் உலகம் எப்படியிருந்தது?
வீட்ல உட்கார்ந்து டிவி பார்க்கிறது, ப்ரெண்ட்ஸோட அரட்டை, புத்தகம் படிக்கிறதுன்னு சாதாரணமாகத்தான் இருந்தது.
சினிமாவுக்கு வந்த போது இருந்த மனநிலை என்ன?
புது இடங்களுக்குப் போனால் அந்த சூழ்நிலை எனக்குப் பிடிக்காது, ஓடி வந்திடுவேன். சினிமாவிலும் முதலில் அப்படித்தான் இருந்தது.
பிறகு...?
சினிமா எல்லாவற்றையும் மாற்றியது. போகிற இடமெல்லாம் கூட்டம்.. ஆட்டோகிராஃப்... அன்பு தொல்லைகள்... படப்பிடிப்பு.... நட்சத்திர அந்தஸ்துன்னு வாழ்க்கையே மாறிவிட்டது.
என்னோட உலகை சினிமா 100 மடங்கு பெரிதாக்கியிருக்கிறது. நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள... நிறைய நாடுகளுக்குப் போகிறேன்... பாராட்டுகள் கிடைக்கிறது... புகழின் உச்சிக்கு போய்விட்டேன்....
மீண்டும் சாதாரண பெண்ணாகும் ஆசை உண்டா?
சினிமாவில் எப்படியிருந்தாலும், வீட்டுக்குப் போனால் நான் இப்போதும் சாதாரண பெண்தான். சினிமா தரும் எல்லாவற்றையும் மறந்திடுவேன்.
சினிமாவினால் கிடைத்தது...?
சினிமாவில் என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்னுடைய உறவுக்காரர்கள் போலாகிவிட்டனர். சினிமா எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கிறது.
நடிப்பு...?
தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைவது மகிழ்ச்சியாக உள்ளது.