டோக்யோ பாராலிம்பிக் 2020: மாரியப்பனின் தொடர் சாதனைகள் தெரியுமா?

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (00:49 IST)
டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இன்றைய T63 உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரீவுக்கும் மாரியப்பனுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது.

இதில் சாம் கிரீவ், 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில், மாரியப்பனின் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்றதை தொலைக்காட்சியில் பார்த்த அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அந்த கிராமமே பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
தமிழக வீரர் மாரியப்பன், ரோஹித் சர்மா உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது
2016 பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன்
8 சுவாரஸ்ய விஷயங்கள்
 
டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது முறையாக தமது திறமையை நிரூபித்துள்ளார் மாரியப்பன். அவர் பெற்ற மற்றொரு சாதனை என்ன, யார் இவர், இவரது சாதனை போல இதற்கு முன்பு சாதித்த இந்திய பாராலிம்பிக் வீரர்கள் யார் என்பது பற்றிய 8 சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
 
1) டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார் மாரியப்பன். 2016இல் நடந்த ரியோ பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார். மற்றொரு வீரர் சரத் குமார் தமது முதல் முயற்சியில் 1.83 மீட்டர் உயரம் தாண்டிய நிலையில், மூன்று முறை தோல்விக்குப் பிறகு 1.86 மீட்டர் உயரத்தை தாண்டியிருந்தார்.
 
2) 2016 ரியோ பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீரர் வருண் சிங் பாட்டீ, இம்முறை நிர்ணயிக்கப்பட்ட 1.80 மீட்டர் உயரத்துக்கு பதிலாக 1.77 மீட்டர் தாண்டி தமது திறமையை வெளிப்படுத்தி ஏழாவது இடத்தில் இருந்தார்.
 
3) 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் தகுதி பெற துனிசியாவில் நடந்த போட்டியில், மாரியப்பன் 1.78 மீட்டர் உயரம் தாண்டினார். இதைத்தொடர்ந்து ரியோ போட்டியில் டி42 பிரிவில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி ஆசிய அளவிலான சாதனையை படைத்தார் மாரியப்பன்.
 
4) தமிழ்நாட்டில் தமது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரனால் உந்தப்பட்டு தடகள ஆட்டத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் மாரியப்பன். பள்ளி செல்லும் நாட்களில் தமது ஐந்தாவது வயதில் பேருந்து சக்கரத்தில் சிக்கியதில் அவரது வலது கால் மூட்டு நசுங்கியது. அது அவரை நிரந்தர மாற்றுத்திறனாளி ஆக்கியது. 2015இல் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் பிபிசி பட்டப்படிப்பை முடித்தார் மாரியப்பன்.
 
5) தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தில் 1995ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிறந்தவர் மாரியப்பன். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். தந்தை ஆரம்பத்தில் குடும்பத்தை கைவிட்டார். தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்தார். தாயார் செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும் மரக்கறி விற்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை வளர்த்தெடுத்தார். தந்தை மீது கொண்ட வெறுப்பால் அவரது பெயரை தமது பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதை தாம் விரும்பவில்லை என்று மாரியப்பன் கூறுகிறார்.
 
6) 2016இல் ரியோ பாராலிம்பிக், 2021இல் டோக்யோ பாராலிம்பிக் என இரு சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி என பதக்கங்களை வென்றதன் மூலம், பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக ஒரே பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற பாராலிம்பிக் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் மாரியப்பன். இதேபோல, 1984இல் இந்திய வீரர் ஜோகிந்தர் சிங் பேடி ஷாட்புட் பிரிவில் வெள்ளி, ஜாவலின், டிஸ்கர் ஆகியவற்றில் தங்கம் என மூன்று பதக்கங்களை குவித்தார். 2004 மற்றும் 2015இல் நடந்த போட்டிகளில் தேவேந்திர ஜஜாரியா ஜாவலின் பிரிவில் இரு முறை தங்க பதக்கங்களையும், 2020 டோக்யோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் பெற்றார்.
 
7) 2017ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருதையும், 2020ஆம் ஆண்டில் இவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் மத்திய அரசு வழங்கி கெளரவித்தது.
 
8) மாரியப்பனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ், மாரியப்பன் பெயரிலேயே  இயக்குவதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்