கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு 11 பிளேயர்கள் மற்றும் ஒரு மாற்று வீரர் என்பது நடைமுறையாக இருந்து வருகிறது. போட்டியின் போது ஏதேனும் ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டாலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் விளையாட முடியாமல் போனாலோ அவருக்கு பதிலாக மாற்று வீரர் களப்பணி செய்வார். ஆனால் அவர் பேட்டிங்கோ, பவுலிங்கோ செய்ய முடியாது.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பெயர் போன ஐபில் போட்டிகளில் இந்த விதியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த முறைக்கு பவர் பிளேயர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பவர்ப்ளேயர் முறையில் எந்த அணியும் தங்களுக்குத் தேவையான ஒரு மாற்று வீரரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இறக்க முடியும். அவர் பேட்டிங் அல்லது பந்துவீச்சு என இரண்டையும் செய்ய முடியும். இது சம்மந்தமான ஐபிஎல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த விதி அமலுக்கு வந்ததும் இனி அணிகள் தங்கள் வீரர்களாக 15 பேரை அறிவிக்கலாம். 12 ஆவது வீரராக 4 வீரர்கள் வைக்கப்பட்டு அவர்களில் யார் வேண்டுமானாலும் களமிறக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஐபிஎல் போட்டிகளை இன்னும் பரபரப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.