இந்திய சிலம்பாட்ட கழகம் நடத்திய தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி தேசிய சிலம்பாட்ட தலைவரும், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையருமான முனைவர் மு.ராஜேந்திரன் தலைமையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையை அடுத்த பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
அகில இந்திய சிலம்பாட்டக் கழகத்தின் சார்பில் 10 வது தேசிய சிலம்பாட்ட போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஜம்மு காஸ்மீர், ஹரியானா, மத்திய பிரதேசம்., கர்நாடகா., ஆந்திரா., தெலுங்கானா, கேரளா., பஞ்சாப் போன்ற பல தரப்பட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பி.எஸ்.சிவதர்ஷினி., தேசிய அளவில் தங்கபதக்கம் பெற்றார். தங்கம் பெற்று தமிழக அளவில் மட்டுமில்ல, இந்திய அளவில் பெருமை சேர்த்த அவருக்கு தமிழ்நாடு சிலம்பாட்டக்கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கிகாரம் பெற்ற கரூர் மாவட்ட சிலம்பாட்டக்கழகத்தின் சார்பில், கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான ஏ.ஆர்.மலையப்பசாமி மற்றும் சிலம்பாட்டக்கழக செயலாளரும், சிலம்பம் பயிற்சியாளருமான ம.கிருஷ்ணமூர்த்தி அம்மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்து சிறப்பு செய்தனர்.
மேலும் தங்கம் வென்ற மாணவி கரூர் அடுத்த காந்தி கிராமத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் சிலம்பாட்டத்தின் மூலம் அந்த மாணவி மற்றவர்களுக்கு சிலம்பக்கலைகள் மூலம் வணக்கம் செய்து மரியாதை செய்ததோடு, பிற மாணவ, மாணவிகளுக்கும் சிலம்பாட்டத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு சிலம்பாட்டக்கலையை கற்றுக் கொடுத்தார். மேலும் ஆண்கள் மட்டுமில்லாமல், தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பாட்டக்கலையை பெண்களும் கற்று தைரியமிக்க மாணவிகளாகவும், வீராங்கனைகளாகவும் மாற வேண்டுமென்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிலம்பக்கலை வீரர், வீராங்கனைகளின் சிலம்பாட்ட கலைகளும் நடைபெற்றது.