குத்துச்சண்டை போட்டிகளின் முடிசூடா மன்னன் ’தி கிரேட்’ முகமது அலி மரணம்

Webdunia
சனி, 4 ஜூன் 2016 (11:52 IST)
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை போட்டிகளின் முடிசூடா  மன்னனாக திகழ்ந்த, முகமது அலி உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்துள்ளார்.
 
ஒரே குத்தில் சோனி லிஸ்டனை முகமது அலி வீழ்த்தியது..
விளையாட்டு உலகில் ‘தி கிரேட்’ என்று அழைக்கப்படுவர் குத்துச்சண்டை வீரர் முகமது அலி [வயது 74]. 1960 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் மிகு எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முகமது அலி, அதன் பின்னர், களமிறங்கிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.
 
1965ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றிலேயே ஒரே குத்தில் சோனி லிஸ்டனை முகமது அலி வெளியேற்றினார். இப்போட்டி உலக குத்துச் சண்டை வரலாற்றில் மிகவும் பிரபலமான போட்டிகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது.
 
தனது வாழ்நாளில் ஒட்டு மொத்த 61 சர்வதேச போட்டிகளில் விளையாடி 56 வெற்றியைப் பெற்றுள்ளார். 5 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 37 முறை நாக்-அவுட் முறையில் வென்றார் என்பது குறிப்பிடதக்கது.
 
அமெரிக்கா இராணுவத்தில் கட்டாயச் சேவை புரிய மறுத்ததால் அவரது உலக சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. மீண்டும் அந்த பட்டத்தை வெல்ல அவர் ஜோ ஃப்ரேஷியர்-உடன் மோதினார். ஆனால் தோல்வியைத் தழுவினார்.
 
1974-ஆம் ஆண்டு மீண்டும் ஜோ பிரேசியருடன் பொருதி அவரை வீழ்த்தி உலக விருதை மீண்டும் வென்றார். இவரை மையமாக வைத்து ‘தி கிரேட்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
 
1980ஆம் ஆண்டுகளின் வாக்கில் பார்கின்சன் நோயால் முகமது அலி பாதிக்கப்பட்டார். குத்துச் சண்டைகளின் போது அவருக்கு தலையில் விழுந்த குத்துகளால்தான் அவருக்கு அந்த நோய் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், அவரது உயிர் இன்று சனிக்கிழமை [04-06-16] பிரிந்தது.

 
அடுத்த கட்டுரையில்