மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.
இந்திய - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் செய்த இந்திய தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 6 ஓவர்கள் மட்டுமே வீசிய ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் விரைவாக வெளியேற்றினார். இதன்மூலம் இந்திய அணி 168 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 3 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கேப்டன் கோஹ்லி இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார்.
இதையடுத்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 4வது நாளான இன்று ஆரம்பத்திலே தொடக்க வீரர்களாக குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து கேப்டன் ரூட் மற்றும் போப் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால் இந்திய அணி இன்றே வெற்றி பெறும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய பட்லர், ஸ்டோக்ஸ் இருவரும் சேர்ந்து விக்கெட் விழாமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பட்லர் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர். இந்த ஜோடி உடைந்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற முடியும். தற்போது இங்கிலாந்து அணி 173 ரன்கள் குவித்துள்ளது.