Under 19 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி..வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டல் ஆட்டம்

Mahendran

செவ்வாய், 1 ஜூலை 2025 (12:30 IST)
இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான   இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 290 ரன்கள் குவித்தது. இதில் வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 
நார்தாம்டனில் நேற்று நடைபெற்ற  போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
 
இந்திய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஆயுஷ் மாத்ரே, தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனினும், மற்றொரு தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷியுடன், விஹான் மல்ஹோத்ரா ஜோடி சேர்ந்து சிறப்பாக ரன்களைச் சேர்த்தனர்.
 
முதல் ஒருநாள் போட்டியில் அதிரடி காட்டியதைப் போலவே, வைபவ் சூர்யவன்ஷி இப்போட்டியிலும் மின்னல் வேகத்தில் ரன்களை குவித்தார். அவர் வெறும் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய விஹான் மல்ஹோத்ரா, 68 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ராகுல் குமார் (47 ரன்கள்), கனிஷ்க் சௌகான் (45 ரன்கள்), அபிக்யான் குண்டு (32 ரன்கள்) ஆகியோரும் அணிக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்தனர்.
 
இங்கிலாந்து தரப்பில், ஏ.எம். பிரெஞ்ச் தனது சிறப்பான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவருக்குத் துணையாக, ஜாக் ஹோம் மற்றும் அலெக்ஸ் கிரீன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இந்நிலையில் 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி  49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 291 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்