அஷ்வினிடம் சரணடைந்த இங்கிலாந்து: டெஸ்ட் தொடரை கைபற்றியது இந்தியா!!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2016 (10:25 IST)
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 3-0 என்ற வலுவான நிலையில் தொடரை கைப்பற்றி உள்ளது. 


 
 
ஏற்கனவே ஒரு போட்டி சமனிலும், இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, மும்பையில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில், 400 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் இரட்டை சதம் முரளி விஜய், ஜெயந்த் யாதவ் உள்ளிட்டோரின் சதம் உதவியுடன் 631 ரன்கள் எடுத்தது. 
 
பின்னர் நான்காவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த விளையாடிய இங்கிலாந்து அணி அஷ்வின் கொடுத்த பெரும் நெருக்கடியில் வீசப்பட்ட 8 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது.
 
இதனால் இங்கிலாந்து அணி, 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைபற்றியது.  இந்திய அணியில் அஷ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஏற்கனவே முதல் இன்னிங்சிலும் அஷ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் 24வது முறையாக டெஸ்ட் அரங்கில், 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார் அஷ்வின்.
 
மேலும், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இந்திய அணி, 3-0 என கைப்பற்றியது. ஐந்தாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
அடுத்த கட்டுரையில்