வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி மூன்று வடிவிலானத் தொடர்களிலும் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டி 20 மற்றும் ஒரு நாள் தொடரை வென்ற இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரண்டாவது போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் இந்தியாவை பேட் செய்ய பணித்தது.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் , லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். அதிக நேரம் நிலைக்காத ராகுல் 13 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த புஜாராவும் 6 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். இதனால் இந்தியா 46 ரன்களுக்கு 2 விக்கெட்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அதன் பின் கேப்டன் கோஹ்லி, மயங்க் அகர்வாலோடு ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். சிறப்பாக விளையாடிய மயங்க் 55 ரன்களில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
அரைசதம் கடந்து சதம் நோக்கி சென்றுகொண்டிருந்த கோஹ்லி எதிர்பாராத விதமாக 76 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்குப் பின் வந்த ரஹானேவும் தன் பங்குக்கு 24 ரன்கள் சேர்த்து நடையைக் கட்டினார். இதையடுத்து ஹனுமா விஹாரியும் ரிஷப் பண்ட்டும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாட ஆரம்பித்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விஹாரி 42 ரன்களும், பண்ட் 27 ரன்களும் எடுத்து களத்தில் நிற்கின்றனர். இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சார்பாக ஹோல்டர் அதிகபட்சமாக 3 விக்கெட்களை விழ்த்தினார்.