பரபரப்பான டெல்லி vs கொல்கத்தா போட்டி – சூப்பர் ஓவர் த்ரில் வெற்றி !

ஞாயிறு, 31 மார்ச் 2019 (07:51 IST)
நேற்று நடந்த டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

12 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. நேற்று நடைபெற்ற 10 ஆவது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் விரைவாக தங்கள் ஆட்டத்தை இழந்து வெளியேறினார். இதனால் ஒருக்கட்டத்தில் கொல்கத்தா 61 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் கேப்டன் தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார் ரஸ்ஸல். இருவரும் இணைந்து சீராக ரன்ரேட்டை உயர்த்தினர். ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த ரஸ்ஸல் சிக்ஸர்களால் வானவேடிக்கைக் காட்டினார். அரைசதம் எடுத்த ரஸ்ஸல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 185 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்களை இழந்தது.

பின்னர் ஆடிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தவிர மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பிருத்வி 99 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணியும் 185 ரன்களே சேர்த்தது. இதனால் போட்டி டை ஆனதை அடுத்து சூப்பர் ஓவர் வீச முடிவு செய்யப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 10 ரன்களை சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் கொல்கத்தா அணி ரஸ்ஸல் மற்றும் தினேஷ் கார்த்திக்கோடு 11 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இறங்கியது. முதல் பந்தே ரஸ்ஸல் பவுண்டரி அடிக்க வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. ஆனால் டெல்லியைச் சேர்ந்த ரபடா அபாரமாக பந்துவீசி ரஸ்ஸலை அவுட் ஆக்கியது மட்டுமல்லாமல் வெறும் 7 ரன்களேக் கொடுத்து வெற்றியைத் தக்கவைத்தார். இதனால் 3 ரன்களில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல்லின் முதல் சூப்பர் ஓவர் போட்டி இதுவாகும். சிறப்பாக விளையாடிய பிருத்விஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்