ஆஸியை துவம்சம் செய்த பூம்ரா – 151 ரன்களுக்கு ஆல் அவுட்

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (10:41 IST)
மெல்போர்ன் டெஸ்ட்டில் இந்திய அணி அபாரப் பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியா 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்று முன் தினம் மொல்போர்னில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மயங்க் அகர்வார் (76),கோஹ்லி (82), புஜாரா (106), ரோஹித் (63*) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அதையடுத்து களமிறம்ங்கிய ஆஸி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை சேர்த்தது.

அதைத் தொடர்ந்து ஆடிய ஆஸி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. உணவு இடைவேளைக்கு முன்பு வரை 89 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. உணவு இடைவேளைக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் மிரட்ட ஆரம்பித்தனர். இந்தியாவின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத ஆஸி பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இந்திய அணியின் சார்பில் துல்லியமாக பந்து வீசிய பூம்ரா 6 விக்கெட்களை சாய்த்தார். ஜடேஜா இரண்டு விக்கெட்களையும், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆஸி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பெய்ன் 22 ரன்களும், ஹாரிஸ் 22 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியாவால் பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை.

291 ரன்கள் பின் தங்கியிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தொடர்ந்து பேட் செய்ய முடிவெடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதாலும் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளதாலும் இந்தியாவின் வெற்றி வாய்ப்புப் பிரகாசமாகியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்