கபாலி முதல் சி 3 வரை எல்லா படங்களுமே நஷ்டம்தான் என்ற விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்தின் பேச்சுதான் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. திருப்பூராருக்கான முதல் பதிலடி தாணுவிடமிருந்து வந்திருக்கிறது.
"கபாலி வெற்றி பற்றி பலமுறை நான் விளக்கிவிட்டேன். இதுக்கும் மேலயும் சந்தேகம் இருந்தால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் லிஸ்ட் தருகிறேன். நீங்களே உண்மையை அறிந்து கொள்ளுங்கள். முதலில் திருப்பூர் சுப்பிரமணியம் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கட்டும். தியேட்டர் உரிமையாளர்களை பிரைன்வாஷ் செய்து அவருடை கட்டுப்பாட்டில் வைத்து, படத்தின் லாபத்தில் நாற்பது முதல் ஐம்பது சதவீதத்தை மட்டும் தயாரிப்பாளருக்கு தந்து மற்றதை அவரே சுவருட்டிக் கொள்கிறார். அவர் விநியோகிக்கும் படங்களை திரையிடும் தியேட்டர்களின் கேன்டீன், டிக்கெட் புக்கிங் கட்டணம், க்யூப் விளம்பரக் கட்டணம் என்று அனைத்திலும் ஒரு ஷேரை அவர் வாங்கிக் கொள்கிறார். அவருக்கு ஏன் இவ்வளவு பேராசை?
"திருச்சி, செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி உள்பட எந்த ஏரியாவிலிருந்தும் கபாலி குறித்து புகார்கள் இல்லை. ஏன் சுப்பிரமணியத்துக்கும் மட்டும் பிரச்சனை? ஏன் என்றால் நான் கபாலியின் கோயம்புத்தூர் உரிமையை அவருக்கு தரவில்லை. அவர் ஐந்து கோடிகளுக்கு கேட்டார், இன்னொருவர் 10 கோடிகளுக்கு கேட்டார். நான் பத்து கோடிகளுக்கு கேட்டவருக்கு படத்தை தந்தேன். இதனால் தியேட்டர் உரிமையாளர்களிடம் கபாலியை யாரும் வாங்காதீர்கள் என்று சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். அவரது இந்த தரம்தாழ்ந்த செயலுக்கான, அவரது ஆடியோ வாய்ஸ் மெயில் என்னிடம் உள்ளது. கபாலி உரிமை கிடைக்காததால் அவர் திட்டமிட்டு குழப்பத்தை உண்டு பண்ணினாரா என்பதை அவரிடமே கேட்டுப் பாருங்கள்" என்று தாணு பதிலடி தந்துள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியம் தனது பேச்சில், மதுரை மணி இம்பாலா திரையரங்கில் கபாலி படம் 200 நாள்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருப்பதை குறிப்பிட்டு, உண்மையில் லாபத்துடன்தான் படத்தை ஓட்டுகிறார்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மணி இம்பாலாவின் உரிமையாளர் கூறும்போது, சுப்பிரமணியத்தின் பேச்சு தனக்கு அதிர்ச்சியடைய வைத்ததாகவும், 217 -வது தினத்திலும் கபாலியை பார்க்க 47 பேர் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணியத்தின் பேச்சு ரஜினி, தாணு இருவரின் புகழையும் கெடுக்கும் விதத்தில் இருப்பதாகவும், திட்டமிட்டு இதுபோல் செய்வது சரியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியத்தின் பேச்சுக்கு கண்டனங்கள் ஒருபுறமும், வரவேற்பு மறுபுறமுமாக தமிழ் திரையுலகு கோபத்தில் கனன்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.