ஏகாதசி விரதங்களின்போது கடைப்பிடிக்கவேண்டிய முறைகள் என்ன...?

Webdunia
வெவ்வேறு மாதங்களில், தினங்களில் வரும் ஏகாதசிகளுக்கும் தனித்தன்மைகள் உள்ளன. ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது.


ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.
 
ஏகாதசி போன்ற விரதங்களின் போது, விரத உண்ணாமையின் முழுப் பயனை அடையவும், விரத நாளில் முழுவதும் உண்ணாதிருப்பது சிரமமாகத் தோன்றாமல் இருக்கவும், முதல் நாளான தசமியன்று ஒருவேளை மட்டுமே உண்கிறோம். மேலும், வெகுநேரம் உணவின்றியிருந்ததற்குப் பின்பு, படிப்படியாகவே உணவு அளவைக் கூட்ட வேண்டும் என்பதற்காக துவாதசியிலும் ஒரு வேளை உணவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
ஏகாதசி தினத்தன்று உணவு அளவு குறைவாயிருந்தாலும் அது எளிதாக ஜீரணிக்கப்பட்டு, அதிக ஊட்டச்சத்தும் அளிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை உபயோகிக்கிறோம்.
 
ஒவ்வொரு ஏகாதசி விரதமும் குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுகிறது.  ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களே, முனிவர்களே வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது.
 
ஏகாதசி விரதத்தன்று, விரிவாக பூஜை செய்வது நல்லது என்றாலும், பலருக்கும் வேலை சுமையின் காரணமாக பசி சோர்வினால் பூஜை செய்வது கலியுகத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. அவர்கள் பழவகைகளை ஸ்ரீமந்நாராயணனுக்கு நைவேத்தியம் செய்து உண்டு விரதத்தை மேற்கொள்ளலாம்.
 
வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல்களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்