சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியில் வராக ஜெயந்தி வழிபாடு !!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (10:12 IST)
இரண்யகசிபு, பிரம்மாவை நோக்கி கடும் தவம் இயற்றி, மூன்று உலகங்களையும் ஆளும் வரத்தைப் பெற்றான். இதனால் அவனது சகோதரன் இரண்யாட்சனுக்கு ஆணவம் அதிகரித்தது. அவன் வருண பகவானை பிடித்து துன்புறுத்த நினைத்தான்.


அப்போது வருணன், “நீ என்னிடம் மோதுவதை விட, வராக அவதாரம் எடுக்கப் போகும் திருமாலிடம் மோதுவதுதான் சிறப்பானது. அவரை வெற்றி கொண்டால், நீ அனைத்தையும் வெற்றி கொண்ட வனாவாய்” என்றார்.

அதன்பிறகு வராக மூர்த்தியைத் தேடுவதே, இரண்யாட்சனின் முழுநேர வேலையாகிப் போனது. ஆனால் எங்கு தேடியும் வராகரைக் காணவில்லை. எனவே பூமியைக் கவர்ந்து சென்று, கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். இதனால் உலக உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன.

பிரம்மதேவர், பூமியை காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்தில் இருந்து கட்டை விரல் அளவு கொண்ட வராகம் தோன்றியது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பிரமாண்டமாக வளர்ந்து நின்றது. மகாவிஷ்ணுவே, வராகமூர்த்தியாக அவதரித்திருந்தார்.

மகாவிஷ்ணு வராகமூர்த்தியாய் வந்துள்ள செய்தியை, நாரதர் மூலம் அறிந்த இரண்யாட்சன் விரைந்து வந்தான். அதற்குள் வராகர், பூமி மறைத்து வைக்கப்பட்டிருந்த கடலுக்குள் நுழைந்து விட்டார். அங்கு வந்த இரண்யாட்சன், வராகரை தடுத்து போரிட்டான். முடிவில் அவனை அழித்த வராகர், தனது இரண்டு கோரை பற்களுக்கு இடையே பூமியை வைத்து கொண்டு கடலுக்குள் இருந்து மேலே வந்தார்.

அப்படி கடலுக்குள் இருந்து மேல்மட்டத்திற்கு வரும் வழியில், பூமாதேவி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம், வராகர் பதிலளித்துக் கொண்டே வந்தார். பின்னர் பூமியை அதன் இடத்தில் நிலை நிறுத்தினார்.

வராகப் பெருமாள் அவதரித்து, பூமியை மீட்ட தினம் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியாகும். அன்றைய தினம் வராக ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்