ஸ்ரீ துளசி, பவித்ரமானவள், பூஜிக்கத் தகுந்தவள், பிருந்தாவனத்தை வாசஸ்தலமாகக் கொண்டவள், ஞானம் நல்குபவள், ஞானமயமானவள், எவ்விதக் களங்கமும் அற்றவள், எல்லோராலும் பூஜிக்கப்படுபவள்.
ஸ்ரீ துளசியானவள், கற்புக்கரசி, பதிவிரதை. பிருந்தா என்ற ரூபமுடையவள். பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள், (கறுப்பு, பச்சை, வெள்ளை) ஆகிய மூன்று வித வண்ணங்களை உடையவள். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவள்.
ஸ்ரீ துளசி தேவி, ஸ்ரீதேவியின் தோழி. எப்போதும் சுத்தமானவள். (பறித்துப் பல நாட்கள் இருந்தாலும் சுவாமிக்கு அர்ச்சனை செய்திருந்தாலும் மற்ற புஷ்பம் போல் நிர்மால்யம் என்ற தோஷமில்லாதவள்), அழகிய பற்கள் உடையவள், பூமியைப் புனிதமாக்குபவள், எப்போதும் ஸ்ரீஹரியையே தியானிப்பவள், பகவானது பாதத்தையே தன் இருப்பிடமாகக் கொண்டவள்.
ஸ்ரீ துளசி, புனிதத்தின் திருவுருவமானவள். மிகச் சிறந்தவள், நல்ல வாசனையுள்ளவள், அமிர்தத்தோடு கூடவே தோன்றியவள், நல்ல தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் தருபவள், மகிழ்ச்சியானவள், மூன்று சக்திகளின் (துர்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி) திருவடிவானவள்.
ஸ்ரீ துளசி தேவி மிகப் பிரகாசமானவள், தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவள், அழகிய திருவுருவம் உடையவள், ஸ்ரீவிஷ்ணுவின் மனதிற்குப் பிரியமானவள், பூதம், வேதாளம் முதலியவற்றால் உண்டாகும் பயத்தை நீக்குபவள், மஹா பாபங்களைப் போக்குபவள்.
விருப்பங்களை நிறைவேற்றுபவள், ஸ்ரீ துளசி தேவி. மேதா (மேதைத் தன்மை, நுண்ணறிவு) வடிவமானவள், ஒளி ரூபமானவள், வெற்றியை அளிப்பவள், சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றைத் தரித்திருப்பவள், தன் விருப்பத்திற்கேற்ற ரூபத்தை எடுக்கும் சக்தியுடையவள்.