சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது எது தெரியுமா....?

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (14:05 IST)
சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதால் பன்னிரு சூரியர்களாக கொள்ளப்படுகிறார்.


சூரியன் ஏறிவரும் தேருக்கு ஒரு சக்கரம் உண்டு. அந்த தேரில் பச்சை வண்ணமுடைய ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு இழுக்கின்றன. இந்தக் குதிரைகளை ஓட்டுகிற ரத சாரதி அருணன். இவர் காலில்லாதவர். சூரியனின் ரதம் பொன்மயமானது. அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும், மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகளும் மூன்று காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்தில் உள்ள ஆறு கட்டைகளும் ஆறு ருதுக்களை குறிக்கின்றன.

சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கின்றன. சூரியன் நான்கு பட்டணங்களையும் சுற்றிவந்து உதயம், மத்தியானம் அஸ்தமனம், அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி. அவரது பிறந்த தினத்தையே ரத சப்தமியாக கொண்டாடுகின்றனர். சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மறுபெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை கழிந்து, பவுர்ணமி கழிந்த 7-ம் நாளை ‘சப்தமி திதி’ என்கிறோம்.

உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில், 7வது நாள் வரும் சப்தமி திதியே ரத சப்தமி ஆகும். ரத சப்தமியன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகிறது. அன்று சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும், ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. அன்று சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட செல்வது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்