ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும். தவிர ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.
ரத சப்தமி நாளில் ஸ்நானம் செய்யும் முறை: ரத சப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இவ்விலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும்.
இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது.