குரு பெயர்ச்சி ராசிப் பலன்கள் 2016 - 17 (மீனம்)

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2016 (16:35 IST)
கஞ்சத்தனம் இல்லாமல் வாரி வழங்குபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துக் கொண்டு வார்த்தைகளால் சொல்ல முடியாதபடி சோகக்கடலில் மூழ்கடித்ததுடன், தொடர்ச்சியாக அல்லல் பட வைத்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகமாகும். உங்களுடைய திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
 
உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். பிரபலங்களின் தொடர்புக் கிடைக்கும். உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு புது வழியில் யோசிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வும் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
 
பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். எவ்வளவோ சிகிச்சை செய்தும், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தையில்லையே என வருந்திய தம்பதிகளுக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். வழக்கு சாதகமாக திரும்பும்.
 
பாதியில் நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவிக் கிடைக்கும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் பரவும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்த காரியம் சுலபமாக முடியும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்ற வருவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று விட்டு சிலர் நகரத்தில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் உதவிகள் உண்டு.
 
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சோர்வு, களைப்பு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். மனைவி உங்கள் முயற்சியை ஆதரிப்பார். அவரின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வீட்டைப் புதுப்பிப்பீர்கள். நீண்ட காலமாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். புதிதாக வாகனம், செல்ஃபோன் வாங்குவீர்கள்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் திட்டமிடாத செலவுகள் இருக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். இனந்தெரியாத கவலைகள் வந்துப் போகும். அடிவயிற்றில் வலி, ஒற்றை தலை வலி, நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்துப் போகும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வார். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். ஆன்மீக பணிகளை முன்னின்று செய்வீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள்.
 
உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 8-ம் வீட்டில் குரு மறைவதால் எதிலும் ஆர்வமின்மை, காரியத் தாமதம், வீண் டென்ஷன், சிறுசிறு விபத்துகள், அலைச்சல், வேலைச்சுமை வந்துப் போகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனை முறையாக செலுத்துங்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். மனஇறுக்கங்கள் உருவாகும். சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். சகோதரங்கள் அதிருப்தி அடைவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் நீங்கள் இருப்பீர்கள்.
 
வியாபாரம் சூடுபிடிக்கும். தொழிலில் ஏற்பட்ட நட்டத்தை சரி செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள்.
 
மக்கள் நடமாட்டம் அதிமுள்ள மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். ஸ்பெக்குலேஷன், போடிங், லாஜிங், இறக்குமதி, ஜுவல்லரி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் பணிவார்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபார சங்கம், தேர்தல் இவற்றில் நல்ல பதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.
 
உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறுவீர்கள். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். எதிராக இருந்த அதிகாரி மாற்றலாவார். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும். அண்டை மாநிலத்தில், அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். ப்ரமோஷன்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். சம்பள உயர்வு, மறுக்கப்பட்ட உரிமைகளெல்லாம் தடையின்றி கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்சனைகளால் நிலைக் குலைந்துப் போனீர்களே! இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். வீட்டில் பார்க்கும் வரனே முடியும். வேலையும் கிடைக்கும். நல்லவர்கள் அறிமுகமாவார்கள். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள்.
 
மாணவ-மாணவிகளே! எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கடினமான பாடங்களிலும் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். ஆசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள்.
 
கலைத்துறையினரே! வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். யதார்த்தமான படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். மக்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் வளரும்.
 
அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்களில் கலந்துக் கொண்டு முக்கிய நிர்வாகிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். மாநில அளவில் பெரிய பொறுப்புகள் கூடி வரும். கோஷ்டி பூசல்களிலிருந்து விடுபடுவீர்கள்.
 
இந்த குரு மாற்றம் உங்கள் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், சமயோஜித புத்தியால் சாதிக்க வைக்கும்.
 
பரிகாரம்:
 
திருச்சிக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபாலச்சந்திர விநாயகரை சதுர்த்தி திதி நாளில் சென்று தரிசியுங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
அடுத்த கட்டுரையில்