குரு பெயர்ச்சி ராசிப் பலன்கள் 2016 - 17 (கும்பம்)

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2016 (16:02 IST)
நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு குடும்பத்தில் சந்தோஷத்தையும், பதவி, பட்டத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் இனி உங்களது பலம், பலவீனத்தை உணர்ந்து உங்களை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
 
எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 
பூர்வீக சொத்தை விற்கம் போது ஒரே தவணையாக பணத்தை கேட்டு வாங்கப் பாருங்கள். விதிகளுக்கு அப்பாற்பட்டு யாருக்கும் உதவ வேண்டாம். வாகனத்தை இயக்கும் முன் எரிப்பொருள் இருக்கிறதா, பிரேக் ஓயர் சரியாக இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வது நல்லது. சின்ன சின்ன விபத்துகள் நிகழக்கூடும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.
 
தூக்கமில்லாமல் போகும். மனசு ஒத்துழைக்கும் போது உடம்பு மறுக்கிறது. அலுப்பு, சலிப்பு, ஒருவித படபடப்பு, காய்ச்சல், கெட்ட கனவுகளெல்லாம் வந்துச் செல்லும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். பலவீனமாக இருப்பதாக சில நேரங்களில் உணருவீர்கள். எதிர்காலத்தை நினைத்து ஒருவித பயம் வந்து நீங்கும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். பிள்ளைகளிடம் அவ்வப்போது குறைகளை கண்டுப்பிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள்.
 
மின்சாரம், கத்திரி கோள், நக வெட்டி போன்றவற்றை கவனமாக கையாளுங்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது. பழைய கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற ஒரு கவலைகள் அடிமனதில் இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று நன்றிக் கெட்டவர்களை நினைத்து வருந்துவீர்கள். நீங்கள் சிரித்தால் உலகமும் சிரிக்கும், நீங்கள் கோபப்பட்டால் உலகமும் கோபப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பிரச்னைகள் வெகுவாக குறையும். உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். வெளியூர் பயணங்களால் நிம்மதி கிட்டும். வேற்றுமதம், மாநிலம் மற்றும் மொழியினரின் ஆதரவுக் கிட்டும். கடந்த காலத்தில் உங்களால் பயனடைந்தவர்கள் தற்சமயம் உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது. மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
 
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். முதிர்ச்சியான, அறிவுப் பூர்வமானப் பேச்சால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். நீங்கள் மிகவும் பக்குவப்பட்டு விட்டதாக சிலர் பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். மகளுக்கு உங்கள் ரசனைக் கேற்ற நல்ல வரன் அமையும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடனான மோதல்கள் விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்ப்புகள் குறையும். வருங்காலத் திட்டமெல்லாம் தீட்டுவீர்கள். நம்மால் முடிக்க முடியுமா என நீங்கள் மலைப்புடன் பார்த்த பல காரியங்கள் இப்போது முடியும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோன் பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம். அதற்கான வழி வகைகள் பிறக்கும். வீடு கட்டுவதற்கும் ப்ளான் அப்ரூவலாகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல் விலகும். மனைவிவழி உறவினர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். அடகிலிருந்த நகைகள், பத்திங்களை மீட்க உதவிகள் கிட்டும். என்றாலும் மனைவிக்கு தைராய்டு, மாதவிடாய், ஃபைப்ராய்டு பிரச்னைகள் வரக்கூடும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் சஷ்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். எந்த நேரம் எந்த ஆபத்து நேருமோ, பெயர் கெட்டுவிடுமோ என அவ்வப்போது அச்சப்படுவீர்கள். ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது நல்லது. நேரம் தவறி சாப்பிட வேண்டி வரும். அல்சர் வர வாய்ப்பிருக்கிறது. வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி ஆறுதல் தேடாமல் தெரிந்த வகையில் தியானம் செய்வது நல்லது.
 
உங்கள் தைரியஸ்தானாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் நெருக்கடிகளையும், தர்மசங்கமான சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மனோபலம் பிறக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். இளைய சகோதர வகையில் மதிப்புக் கூடும். புது வேலைக் கிடைக்கும். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். வழக்கு சாதகமாகும்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 9-ம் வீட்டில் குரு நுழைவதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். உங்களுடைய அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எடுத்த காரியங்களை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கு சிலர் உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். அடுத்தவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக்கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆன்மித்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
 
வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.
 
வாடகை இடத்தில் கடையை வைத்திருப்பவர்களுக்கு கடை உரிமையாளரால் தொல்லை அதிகரிக்கும். வாடகை அதிகப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. கடையை சிலர் மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பிட் நோட்டிஸ், வானொலி விளம்பரம் என செலவிடுவீர்கள். ஸ்க்ராப், கமிஷன், பெட்ரோ-கெமிக்கல், மின்சார சாதனங்கள், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளாமல் போவார்கள்.
 
எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். சிலர் உத்யோகத்தின் பொருட்டு அயல்நாடு செல்வீர்கள். சிலர் உங்களைப் பற்றி தவறான புகார்களில் சிக்க வைத்து கோர்ட், கேஸ் என்று அலைக்கழிப்பார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடி பெற வேண்டி வரும்.
 
கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள். ஸ்கின் அலர்ஜி, முடி உதிர்தல் வந்துப் போகும். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். உங்களிடம் அன்பாகப் பேசி சிலர் உங்களை பாதை மாற்றக் கூடும். கல்யாணம் கொஞ்சம் தாமதமானாலும் நல்லபடியாக முடியும். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! மறதியால் மதிப்பெண் குறையும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. உடன்படிக்கும் நண்பர்கள் உங்களை விட அதிக மதிப்பெண்ணை பெற்று உங்களை தலைகுனிய வைப்பார்கள். கவனம் தேவை. தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள். நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
கலைத்துறையினரே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்ன சின்ன வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலால் உங்கள் புகழ் குறையும். தலைமையுடன் விவாதம் வேண்டாம். தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். சகாக்களை அடக்கி வாசிக்க சொல்லுங்கள்.
 
இந்த குரு மாற்றம் விவேகமான முடிவுகளாலும் நிதானத்தாலும் நெருக்கடிகளை நீந்தி கடக்க வைக்கும்.
 
பரிகாரம்:
 
திருவண்ணாமலை-கடுவனூருக்கு அருகிலுள்ள சங்கராபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதாண்டேஸ்வரரையும், ஸ்ரீசிவகாமி அம்மையாரையும் சதுர்த்தசி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.
அடுத்த கட்டுரையில்