வாழ்க்கை என்பதும் அன்பே!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (15:59 IST)
(ஜெய்ப்பூரில் 2008 மார்ச் 7ஆம் தேதி அகில உலக அமைதியின் தொடக்கத்திற்கான பெண்கள் மாநாட்டில் மாதா அமிர்தானந்தமயி ஆற்றிய அருளுரை)





இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் நிகழும் போராட்டத்தையே இன்று நாம் காண்கிறோம். இதில் விட்டுக்கொடுக்க முன்வராத ஆண்குலம் கடந்த காலத்தின் அடையாளமாகும். மலர்ந்து மணம் வீசும் அழகிய மலரைப் போல் எதிர்காலம் இருக்க வேண்டுமானால், அனைத்துத் துறைகளிலும் ஆணும் பெண்ணும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். உலகின் நன்மையும், அமைதியும் நிலவ வேண்டும் என்று விரும்புபவர்கள் எதிர்காலத்தை நினைத்து வாழவேண்டும். அதேசமயம், எதிர்காலம் அழகு நிறைந்ததாக ஆக வேண்டுமெனில், இப்போது இந்த நிமிடத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு, இந்த நிகழ்காலத்தில் ஆண்-பெண் இருவரின் மனம், புத்தி ஆகியவை ஒன்றாக இணைய வேண்டும். இனியும் தாமதிக்க நேரமில்லை. காலதாமதம் செய்யச் செய்ய உலகின் நிலை மோசமாகிக் கொண்டே இருக்கும்.

ஆணும் பெண்ணும் இணைந்து செயல்புரிந்து, ஆரோக்கியமான அரசை நிறுவ முடியும். ஆனால் இதற்கு பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மையும், திறந்த மனதுடன் கூடிய பேச்சுவார்த்தையும் அவசியமாகும். பாம்பின் விஷம் மரணத்திற்குக் காரணமாகும். ஆனால், அதே விஷத்தை மருந்தாக்கி ஒரு ஆளின் உயிரைக் காக்கலாம். அதேபோல், நம்முடைய தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றினால், நம்மால் சமூகத்தைக் காக்க முடியும். அன்பு ஒன்றால் தான் தீய எண்ணங்களாகும் விஷத்தை அமிர்தமாக மாற்ற முடியும்.

அன்பு உணர்வு பொதுவாக எல்லா உயிரினங்களிடமும் காணப்படுகிறது. ஆணைப் பெண் அடையவும், பெண்ணை ஆண் அடையவும் அன்பே வழியாகும். ஆண்-பெண் இருவரும் இயற்கையை அடையவும், அதற்கும் மேலாக இப்பிரபஞ்சத்தை அடையவும் அன்பே வழியாகும். எல்லைகள் அனைத்தையும் கடந்து அன்பு பெருகும் போது, அது உலகையே அரவணைக்கும் தாய்மையாக ஆகிறது.

இவ்வுலகில் மகிமை பொருந்திய மலர் அன்பு மலராகும். மிகச்சிறிய செடியிலிருந்து மிக அழகான, மனதைக் கவரும் நிறமுள்ள, இனிய மணம் நிறைந்த மலர் இயல்பாக மலர்கிறது. இதைப்போல், மனித இதயங்களில் அன்பு மொட்டாகி, மலர்ந்து, மணம் பரப்ப வேண்டும். ஆண்-பெண் இருவரும் இந்த அன்பு மலர் தங்கள் இதயங்களில் மலர அனுமதிக்க வேண்டும்.

இரண்டு இதயங்கள் ஒன்றை ஒன்று நேசிப்பதை விட ஆழமான சக்தியோ, அழகோ வேறு எதுவும் இல்லை. மனதைக் குளிரச் செய்யும் முழு நிலவின் குளிர்ச்சியும், சூரியக் கதிர்களின் பிரகாசமும் அன்பிற்கு உண்டு. ஆனால், அன்பானது அனுமதியின்றி நம் இதயத்திற்குள் நுழையாது. இதய வாயிலில் காத்திருக்கும் அன்புக்கு அழைப்பு விடுக்க ஆண்-பெண் இருவரும் முன்வர வேண்டும். அன்பு ஒன்றால் மட்டுமே ஆண்-பெண்ணின் சிந்தனை போக்கிலும், உலகிலும் நிலையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

கணவன்-மனைவியர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால், இருவருக்குமிடையில் இப்போது தினமும் அதிகரித்துவரும் இடைவெளி குறையும். இதன் மூலம் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் ஓரளவு தீரும். இக்காலத்தில், தம்பதிகள் பிறரை ஏமாற்றுவதற்காகவும், சமூகத்தை நம்பச் செய்வதற்காகவும், "நாங்கள் இருவரும் பரஸ்பர அன்பு மற்றும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்" என்று சொல்கிறார்கள். இது அன்பாக இருப்பதாக நடிப்பதாகும். அன்பு என்பது நடிப்பதோ, கபடத்தனமோ அல்ல. அது வாழ்வாகும். அதுவே வாழ்க்கை.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்