சூரனை வேல் கொண்டு சம்ஹாரம் செய்த முருகப்பெருமான்...!

செவ்வாய், 13 நவம்பர் 2018 (18:01 IST)
சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததை கந்தசஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நாள் ஆகும். அதாவது, சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில்களில் இன்று நடக்கிறது.
ஆறாம் நாளான இன்று கடற்கரையில் சூரனை வெல்லும் திருவிழா தொடங்கியது. முதலில் யானைமுகம் கொண்ட தாரகனுடன் போர் புரிகிறார். அவன்  வலமிடமாக முருகனை சுற்றி வருகிறார். தலையில் பட்டுக் கட்டிய பட்டர் வேலால் அச்சூரனை நெற்றியில் குத்தி வீழ்த்துகிறார்.
 
அதே உடலில் சிங்கமுகன் தலை பொருத்தப்படுகிறது. சிங்க முகன் முருகனை வலமிடமாகச் சுற்றி வருகிறான். பட்டர் சிங்க முகன் நெற்றியிலும் வேலால்  குத்தி வீழ்த்துகிறார். அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப்படுகிறது. சூரனும் முருகனை வலமிடமாக வருகிறான். இப்போது சூரனின் நெற்றியிலும்  வேலால் குத்தி வீழ்த்துகிறார். நான்காவதாக மாமரமும் சேவலும் அவ்வுடலில் பொருத்தப்படுகின்றன. மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறக்கிறது.
 
ஒரே உடலில் தலைகளைப் பொருத்துவது ஒரே உடலில் மாயை, கன்மம், ஆணவம் பொருந்தியுள்ளதைக் குறிப்பிடுகிறது. சூரனை வென்ற பின்  கடற்கரையிலுள்ள சஷ்டி மண்டபம் என்னுமிடத்தில் முருகனை அமர்த்தி வழிபாடு நடத்துவர்.
 
பின்னர் முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி மீண்டும் முருகனது கைகளில் வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த,  உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு நீரானது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் சிவபூஜை  செய்தார். விண்ணும் மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.

தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் என்ற தலத்துக்கு  முருக பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவ தச்சனால்  நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர்.
 
தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருக பெருமானுக்கு திருமணம் செய்ய எண்ணி பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மன் முருகனின் உளப்பாங்கு அறிந்து அவரிடம் தனது விண்ணப்பத்தை வைத்தார். முருக பெருமானும் மகிழ்ந்து சம்மதம் சொன்னார்.
 
திருப்பரங்குன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும் அவன் மனைவி இந்திராணியுடன்  தெய்வானையின் கை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்